சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம், கஞ்சா, உயிரினங்கள் போன்றவை கடத்தப்பட்டு வரும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
அதன்படி, தாய் ஏர்லைன்ஸில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து சந்தேகப்படும் படியான பயணிகளை நிறுத்தி, அவர்களது உடைமைகளை சோதனை செய்து வந்துள்ளனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த யூசுப் மதீன் (50) என்பவர் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலாப் பயணியாகச் சென்று விட்டு இந்த விமானத்தில் திரும்பி வந்துள்ளனர்.
அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதை அடுத்து, பயணி யூசுப் மதீனின் சூட்கேசை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர் மறைத்து வைத்திருந்த பார்சலைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர், அந்த பார்சலில் சோதனையிட்ட போது பதப்படுத்தப்பட்ட வெளிநாட்டு கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. உயர் ரக கஞ்சாவான இது அதிக போதை கொடுக்கக் கூடியது என சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தாய்லாந்து, நேபாளம், சீனா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் விளையக்கூடிய இந்த கஞ்சாவை, அதிக போதைக்காக இளைஞர்கள் பயன்படுத்துகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது. மேலும், இந்த உயர் ரக கஞ்சாவனது, ஒரு கிலோ ஒரு கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடத்தி வரப்பட 650 கிராம் கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 65 லட்சம் என கூறப்படுகிறது. இதையடுத்து, சுங்க அதிகாரிகள் கஞ்சா கடத்தி வந்த பயணி யூசுப் மதீனை கைது செய்து, இந்த கஞ்சாவை யாரிடம் கொடுப்பதற்காக கடத்தி வந்தார்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்