சேலம்: சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே தேக்கம்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த பகுதியில் 200க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்வசித்து வருகின்றனர். கடந்த 6 மாதங்களாக இந்த ஊராட்சி பகுதியில் முறையான குடிநீர் வசிதி இல்லாமல் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
குடிநீருக்காக இப்பகுதி மக்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வருவதாகவும், இது குறித்து ஊராட்சி தலைவரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 01) அந்த பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் கருப்பூர் - சேலம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஒன்றை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பள்ளி மற்றும் வேலைக்கு செல்லக் கூடிய பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
மேலும், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது குறித்து தகவல் அறிந்த கருப்பூர் காவல்துறையினர் விரைந்து வந்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், "ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கி 6 மாத காலத்திற்கு மேலாக ஆகிவிட்டது. பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் தான் சாலை மறியல் போராட்டத்தை நடத்தி இருக்கிறோம்.
எனவே உடனடியாக எங்கள் ஊராட்சிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இங்கு உள்ள 200க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமுதாயத்தினர் வாக்களிக்க போவதில்லை என்று முடிவு செய்து உள்ளோம்" என தெரித்தனர்.
இதையும் படிங்க: பூதாகரமாகும் கச்சத்தீவு விவகாரம்! தேர்தல் யுக்தியா? மீனவர்கள் மீது அக்கறையா? வரலாறு கூறுவது என்ன? - Katchatheevu Island