சென்னை: கடந்த 2017ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றியில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிப்பட்டவரின் மனைவி, தனது பெண் குழந்தையை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் விட்டுச்சென்றுள்ளார். இந்த நிலையில் அதே மருத்துவமனையில் வார்டு பாயாக பணிபுரிந்த 48 வயதான வெங்கடேசன் என்பவர் அந்த அறைக்குச் சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததுடன், பெற்றோரிடம் சொல்லக்கூடாது என மிரட்டியும் உள்ளார் என்று கூறப்படுகிறது.
இதனை அறிந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வார்டு பாய் வெங்கடேசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வெங்கடேசன் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜராகி வெங்கடேசன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த வாதங்களை முன்வைத்தார்.
இதன் பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வெங்கடேசனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை - கோரக்பூர் விரைவு நீதிமன்றம் அதிரடி!