சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக ரகு என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுதக் ஷாவுடன் பூங்காவில் உள்ள ஒரு சிறு அறையில் ஒன்றாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காவலாளி ரகு உறவினர் ஒருவர் இறந்ததாக கூறி விழுப்புரம் சென்றுள்ளார். பூங்காவில் தாயும், மகளும் மட்டும் இருந்துள்ளனர்.
இதனிடையே நேற்று மாலை பூங்கா அருகே வசிக்ககூடிய புகழேந்தி என்பவர், தான் வளர்க்கும் இரண்டு ராட்வீலர் ரக நாய்களுடன் பூங்கா சென்றுள்ளார். அப்போது பூங்கா உள்ளே விளையாடி கொண்டு இருந்த காவலாளியின் மகள் சுதக் ஷாவை இரண்டு நாய்களும் கடுமையாக கடித்துள்ளன. இதை பார்த்த நாயின் உரிமையாளர் எதும் செய்யாமல் வேடிக்கை பார்த்ததாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். குழந்தையின் அழுக்குரல் கேட்டு ஓடி வந்த தாய், வெறி பிடித்த இரண்டு நாய்களிடம் இருந்து தனது குழந்தையை காப்ப்பாற்ற போராடி உள்ளார்.
அப்போது அவரது தாய் சோனியாவையும் இரண்டு நாய்களும் கடித்துள்ளன. இதை பார்த்த நாயின் உரிமையாளர் எதும் செய்யாமல் இருந்ததாகவும், நாயை அங்கே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நாய்களின் கோர தாக்குதலால் குழந்தையின் தலையின் சதைப் பகுதி பெரிய அளவில் பிய்ந்து தொங்கியுள்ளது. காட்டு விலங்கு போல வேட்டையாடிய அந்த நாய்களை போராடித் துரத்திய அக்கம் பக்கத்தினர், குழந்தையையும், தாயையும் மீட்டு, இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆயிரம் விளக்கு போலீசார், நாயின் உரிமையாளர் புகழேந்தியை விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் நாயின் உரிமையாளர் குழந்தைக்கு தனது செலவில் சிகிச்சை மேற்கொள்வதாக கூறி சமாதானம் பேசியதாக கூறப்படுகிறது. உடனே இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து, ஆயிரம் விளக்கு அப்பல்லோ குழந்தைகள் மருத்துமனைக்கு குழந்தை மாற்றப்பட்டு அங்கு குழந்தைக்கு தற்பொழுது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும் பொழுது, “நேற்று மாலை அவர் பூங்காவிற்கு நாயை அழைத்து வரும் பொழுது இரண்டு நாய்களையும் கயிறு கட்டி அழைத்து வரவில்லை. மேலும் நாயின் வாய் பகுதிக்கு எந்த ஒரு பாதுகாப்பு கவசமும் போடவில்லை. பூங்கா உள்ளே வந்ததும் விளையாடி கொண்டிருந்த குழந்தையை இரண்டு நாய்களும் வெறி பிடித்தது போல கடித்தன. குழந்தையின் தலையை கவ்வியும், மற்றொரு நாய் குழந்தையின் கையும் பிடித்து கடித்தது.
அப்போது கூட நாயின் உரிமையாளர் அதை தடுக்கவில்லை. அவர் இந்த பகுதியில் இரத்த வங்கி நடந்தி வருகிறார். அவர் இரண்டு ராட்வெய்லர் (Rottweiler) நாய்களை வளர்த்து அதன் குட்டிகளை விற்பனை செய்து வருகிறார். ஏற்கனவே அந்த இரண்டு நாய்களும் அந்த பகுதியில் உள்ளவர்களை இரண்டு முறை கடித்துள்ளது. ஆனாலும் அவர் நாய்களின் வாய்களில் எந்த ஒரு கவசமும் அணிவிக்கவில்லை என்றனர். 2021ம் ஆண்டிலேயே இதே நாய்கள் தெருவில் போவோர் வருவோரை துரத்தும் சிசிடிவி காட்சிகளும் அச்சுறுத்தும் விதத்தில் உள்ளன.
அந்த குழந்தையை நாங்கள் மருத்துமனைக்கு அனுப்பி வைத்த பின்னர், அவரிடம் சென்று இனிமேல் இந்த நாய்களை இங்கே வளர்க்க கூடாது என தெரிவித்தோம்” என கூறினார். அந்த பகுதியில் உள்ள பெண்கள் கூறும் பொழுது, “பிழைப்பிற்காக ஊரில் இருந்து சென்னை வந்து வேலை செய்யும் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. பூங்காவில் பணிபுரியும் காவலாளிக்கே பாதுகாப்பு இல்லை என்றால், என்ன செய்வது?. நாங்கள் இரவு நேரங்களில் நடந்து செல்லக்கூட அச்சமாக உள்ளது” என தெரிவித்தனர்.
தொடர்ந்து போலீசார் நாயின் உரிமையாளரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நாயின் உரிமையாளரை காவல்துறையினர் காப்பாற்ற முயற்சி செய்வதாக குழந்தையின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாவது, “மாநகராட்சி பூங்காவில் 5 வயது குழந்தையை நாய் கடித்த சம்பவம் எதிர்பாராத சம்பவம். செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கான லைசன்ஸ் அவர்களிடம் இல்லை. அது தனிப்பட்ட முறையில் விசாரிக்கப்படுகிறது. கால்நடைத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கால்நடைகளுக்கும் தொந்தரவு இன்றி செல்ல பிராணிகளை வளர்ப்பவர்களுக்கும் பிரச்சினை இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மாநகராட்சி சார்பில் எந்த செல்லப்பிராணி வளர்ப்பது என்றாலும், லைசன்ஸ் பெற வேண்டும் என்பதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தையை கடித்த நாய் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விலங்குகள் நலத்துறையின் விதிமுறைகள் மிகவும் சவாலானதாக உள்ளன. விலங்கு ஆர்வலர்களையும் ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்டவர்களையும் முன்வைத்து பேசப்படும்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளில் நாய் கடித்ததில் ரேபிஸ் நோய் ஏற்பட்டு 141 பேர் இறப்பு - பொது சுகாதாரத்துறை!