கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவாளைப் பகுதியைச் சேர்ந்தவர், நேசமணி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் ஞான சிகாமணி என்பவருக்கும் இடையே சொத்து பிரச்னை தொடர்பாகத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2005 ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி நேசமணியின் மகன் முத்துராஜ் உறவினர் ஞான சிகாமணியை தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் இதையறிந்த ஞான சிகாமணியின் மகன்கள் செல்வன், செல்வ சிங் ஆகியோர் ஆத்திரம் அடைந்துள்ளனர். அதனால், செல்வன், செல்வ சிங் மற்றும் அவரது நண்பர்கள் வாளையத்து வயல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், அழகியப்பாண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த ரசீத் மற்றும் துறை ஆகியோர் சேர்ந்து விவசாயியான நேசமணியின் மகன் முத்துராஜை திட்டமிட்டு ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் அரங்கேறியது.
மேலும் இந்த கொலை சம்பவம் அந்த நாளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், இது தொடர்பாக பூதப்பாண்டி காவல்நிலைய போலீசார் 9 பேரை கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட 9 பேரும் ஜாமீனில் விடுதலையாகினர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்ற 8 பேர் மீதான வழக்கு நாகர்கோவில் மாவட்ட உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நேற்று (மார்ச் 11) விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு ஆஜரான குற்றம்சாட்டப்பட்ட செல்வன், செல்வ சிங், சுரேஷ், ரசீத், துரை ஆகிய 8 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மேலும் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 5 குற்றவாளிகளும் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோல, முத்துராஜ் கொலை சம்பவம் நடந்த அதே நாளில் அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணனும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் செல்வ சிங், செல்வன், சுரேஷ், ரசீத், துரை உள்ளிட்ட 9 பேர் மீதும் பூதப்பாண்டி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை தனித்தனியாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
விவசாயி கொலை வழக்கில் அண்ணன் தம்பி உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவலர்கள்; ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு