சென்னை: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாரயத்தை அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூன் 24 பகல் 12 மணி நிலவரப்படி 58 பேர் உயிரிழந்துள்ளனர். 156 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் செய்தி அனைவரையும் பெரும் துயரத்திற்கு ஆழ்த்தியுள்ள நிலையில், தற்போது கள்ளச்சாராயத்தால் கணவனை இழந்து 44 பெண்கள் தவித்து வரும் தகவல் மேலும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் ஜூன் 23ம் தேதி வரையில் எடுக்கப்பட்ட கணக்கெடுக்கப்பில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. ஒரு குடும்பத்தில் கணவர் இறந்து விட்டால், அந்த உணர்வு ரீதியிலான இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கும் பெண்கள் உடனடியாக பொருளாதார நெருக்கடியில் தள்ளப்படுகின்றனர்.
அப்படி, கணவன், மனைவி குழந்தை என மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த 44 குடும்பத்தின் அடிவேரை ஒட்டு மொத்தமாக அசைத்துள்ளது இந்த கள்ளச்சாராயம். அவர்களில், 19 பெண்கள் 20 வயது முதல் 40 வயது வரையிலும், 40 வயதிற்கு மேல் 24 பெண்களும், ஒரு பெண் 11 மாத கைக்குழந்தையுடன் கணவரை இழந்துள்ளார் என்ற தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள கள்ளக்குறிச்சியில் நமது ஈடிவி பாரத் ஊடகம் செய்தியாளர் கள ஆய்வில் மேற்கொண்ட போது, 'அவருக்கு சாவுற வயசே இல்லையா' என ஒரு பெண் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு செய்வதறியாது கணவனை இழந்து நிற்கும் கர்ப்பிணியின் குமுறல் நெஞ்சை பதைபதைக்க செய்கிறது.ஒரு குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்த துக்கம் தீரா நிலையில், இரு குடும்பங்களில் கணவன், மனைவி என இருவரும் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்துள்ளனர்.
அரசு கைகொடுக்குமா?: கணவனை இழந்த பெண்களில், 12 பேருக்கு திறன் வளர்ப்பு பயிச்சி அளிக்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். மேலும், கைம்பெண் உதவித்தொகை 50 ஆயிரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் பொருளாதர மேம்பாட்டிற்கு அனைத்துத்துறைகளையும் இணைத்து தகுதியின் அடிப்படையில் உதவிகள் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.
மேலும், கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உள்ள பகுதிகளில் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அறிகுறிகள் இருக்கிறதா? என்பதையும் கேட்டறிந்து பாதிப்பு தெரிந்தால் மருத்துமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கின்றனர். அதேபாேல் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளை சந்தித்தும் அவர்களின் கல்வி பாதிக்காத வகையிலும் இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
எங்களோட போகட்டும்: அரசின் நலத்திட்டங்களை கேட்கும் பெண்கள், அதே நேரத்தில் கள்ளச்சாராயம் குடித்து அதனால் ஏற்பட்ட இழப்பு என்பது தங்களது குடும்பத்தோடு போகட்டும் வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.