தூத்துக்குடி: தூத்துக்குடியைச் சேர்ந்த கண்ணன்(41) என்பவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு, வீட்டிலிருந்து கொண்டே பகுதி நேரம் வேலை செய்யலாம் என்ற குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனையடுத்து அந்த நம்பரைத் தொடர்பு கொண்ட கண்ணன் அவர்களிடம் பேசியபோது ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் போன்றவைகளுக்கு ரேட்டிங்ஸ் கொடுப்பதன் மூலம் பணம் கிடைக்கும் எனக் கூறியுள்ளனர்.
பின்னர் கண்ணன் முதலில் அவர்கள் அனுப்பிய லிங்க் மூலம் ரேட்டிங் செய்து சிறிய தொகை பெற்றுள்ளார். இதன் பிறகு ஒரு கம்பெனியில் முதலீடு செய்ய வேண்டும், அப்படி செய்தால் நீங்கள் முதலீடு செய்த பணத்தை விட அதிகமான பணம் கொடுப்போம் என்று மர்ம நபர்கள் கூறியுள்ளனர்.
இதனை நம்பிய கண்ணன், கடந்தாண்டு டிசம்பர் மாதம் தனது 2 வங்கி கணக்குகளிலிருந்தும் அந்த மர்ம நபர்களின் 11 வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ரூ.34,07,570 பணத்தை அனுப்பி உள்ளார். ஆனால் முதலீடு செய்த பணம் எதுவும் திரும்பி வரவில்லை.
அதன் பின்னர், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த கண்ணன், இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான தனிப்படை போலீசார் மோசடி கும்பலை வலைவீசித் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாகத் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் கண்ணனின் வங்கி கணக்குகளில் இருந்து கேரளா மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த 7 வங்கி கணக்குகளுக்கு சுமார் ரூ.22.32 லட்சம் மற்றும் மேலும் 3 வங்கி கணக்குகளுக்கு ரூ.11 லட்சம் பணம் பெறப்பட்டிருந்தது, தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த வங்கி கணக்குகளின் உரிமையாளர்கள் குறித்து விசாரித்த போது, மலப்புரம் பகுதியைச் சேர்ந்த வினித்(33), நிகில் குமார்(30), அலாவி(39) மற்றும் ரியாஸ்(32) ஆகிய 4 பேரும் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து கேரளா விரைந்த தனிப்படை போலீசார், 4 பேரையும் கைது செய்தனர். பின்னர், தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று (மார்ச் 15) ஆஜர்படுத்தி, பேரூரணி சிறையிலடைத்தனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகின்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.9.17 லட்சத்தை நீதிமன்ற உத்தரவுப்படி முடக்கிய போலீசார் அவற்றிலிருந்து முதற்கட்டமாக ரூ.4.78 லட்சம் பணத்தைக் கண்ணனின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தனர். மீதமுள்ள பணத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறன்றனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: “செயல்படாத அதிகாரிகளுக்கு முதல் வணக்கம்” - ஆட்சியர் முன்பு பேசிய தென்காசி விவசாயி!