தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர், கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது தாயாரின் மறைவிற்குப் பிறகு தாயார் எழுதி வைத்த உயிலின்படி தாயார் பெயரில் உள்ள நிலத்தைத் தனது பெயருக்குப் பட்டா பெயர் மாற்றம் செய்யக்கோரி விண்ணப்பம் செய்துள்ளார்.
அப்போது, திருபுவனம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த ரவி என்கிற ரவிக்குமார்(69) கோவிந்தபுரம் கிராம நிர்வாக அலுவலராகவும் கூடுதலாகப் பொறுப்பு வகித்து வந்தார். இவர் பார்த்தசாரதியின் மனுவின் பெயரில் பட்டா பெயர் மாற்றத்திற்குப் பரிந்துரை செய்ய ரூ.4000 லஞ்சமாகக் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத பார்த்தசாரதி தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமாரை லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாகப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கும்பகோணம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த முதன்மை குற்றவியல் நீதிபதி சண்முகப்பிரியா இன்று (ஏப்.29) தீர்ப்பு வழங்கினார்.
அந்த தீர்ப்பில் கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமாருக்கு ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 7ன் கீழ் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் மற்றும் பிரிவு 13 (1) (d) r/w 13 (2)-ன் கீழ் இரண்டு வருடம் கடுங்காவல் தண்டனையும் ரூ.2,000 அபராதமும் விதித்தார். அபராதங்களைக் கட்ட தவறும் பட்சத்தில் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.
வேலூர்: வேலூர் மாநகராட்சியில் 2017ஆம் ஆண்டு டெங்கு கொசு ஒழிப்பு பணி ஒப்பந்தம் எடுத்திருந்த பாலாஜி என்பவரிடம் ஒப்பந்த தொகை 10 லட்சத்து 23 ஆயிரத்தை விடுவிக்க ரூ.20,000 மாநகராட்சி ஆணையராக இருந்த குமார் லஞ்சம் வாங்கினார். இதில், குமார் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், முன்னாள் வேலூர் மாநகராட்சி ஆணையர் குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பைக்கு தகுதியானவர் நடராஜன்: முத்தையா முரளிதரன் கருத்து - Muttiah Muralitharan On Natarajan