சேலம்: சேலத்தில் காதல் திருமணம் செய்த பத்து நாளில் புது மாப்பிள்ளை கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மனைவியின் அந்தரங்க வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடாமல் இருக்க உறவினர்களிடம் இரண்டு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதால், கொலை நடந்திருப்பது போலீசார் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இது குறித்துத் தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது.
சேலம் மாவட்டம், லைன் மேடு பகுதியை சேர்த்தவர் முபாரக் (வயது 22). இவர் நேற்று (பிப்.25) சேலம் கந்தம்பட்டி ரயில்வே கேட் பெருமாள் கோயில் பகுதியில் உள்ள முட்புதரில் முகம் புதைக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று முபாரக்கின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், லைன்மேடு பகுதியைச் சேர்ந்த முபாரக் என்பவர் மூணாங்கரட்டில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்த போது, அதே கம்பெனியில் வேலை செய்த வந்த ஷாஜினி (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியது.
இதனையடுத்து, இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஷாஜினி பெற்றோரின் வீட்டுக்குச் சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த முபாரக் தனது மனைவியின் அந்தரங்க வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்று பெண்ணின் உறவினர்களிடம் 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து, பெண்ணின் பெற்றோர்கள் முபாரக்கை பேச வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் அவர் செல்லவில்லை, இந்த நிலையில் நேற்று முன்தினம் முபாரக் ஆம்பூருக்கு ரயிலில் சென்று விட்டு மீண்டும் சேலத்திற்குத் திரும்பியுள்ளார்.
இதனையறிந்த பெண்ணின் உறவினரான பையாஸ் அவரது இரண்டு நண்பர்கள், புது மாப்பிள்ளையான முபராக்கை, கந்தம்பட்டி ரயில்வே கேட் அருகே அழைத்துக் கொண்டு வந்து பேசி உள்ளனர். அப்போது, பணம் தரவில்லை என்றால் பெண்ணின் அந்தரங்க படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார் முபாரக். இதனால் ஆத்திரம் அடைந்து அவர்கள் முபாரக்கை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணின் உறவினரான பையாஸ் மற்றும் அவரது இரண்டு நண்பர்களான யாசின் மற்றும் முபாரக் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மாந்திரிகம் செய்வதாகக் கூறி வயதான தம்பதியரிடம் தங்க நகை பறிப்பு; மர்ம நபரைக் கைது செய்து போலீசார் நடவடிக்கை!