திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பழைய மும்முனி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் செய்யாறு சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, வெடாலில் உள்ள அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, ராஜசேகர், அவரது மனைவி பத்மா, மகள்கள் சுபாஷினி, மோகனாஸ்ரீ மற்றும் மைத்துனி பானு ஆகியோர் ஒரே ஆக்டிவா ஸ்கூட்டியில் சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கோயிலில் தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய அவர்கள், கீழ்சாத்தமங்கலம் பைபாஸ் கூட்டுச் சாலை அருகே திரும்பியபோது, நிலைதடுமாறிய இரு சக்கர வாகனம் சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பில் மோதியுள்ளது, அதில் 5 பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். பின்னர், அருகில் இருந்தோர் வந்து பார்த்தபோது, ராஜசேகரின் மைத்துனி பானுவும், மகள் மோகனாஸ்ரீயும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அதையடுத்து படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த ராஜசேகர், அவரது மனைவி மற்றும் மகள் சுபாஷினி மூன்று பேரையும் மீட்ட அப்பகுதியினர், வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து மூவரும் மேல்சிகிச்சைக்காக மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அங்கே, மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ராஜசேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், தாய் பத்மா மற்றும் மகள் சுபாஷினி இருவருக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே தகவலறிந்து வந்த பொன்னூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து இறந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்