தேனி: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டம் தேவாரம் அருகே நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில், மறவபட்டி கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டு, அவர்களது கிராமத்தில் இருந்து விநாயகரை ஊர்வலமாக டிராக்டரில் எடுத்துச் சென்று ஆற்றில் கரைத்துவிட்டு, பின்னர் அதே டிராக்டரில் தங்களது கிராமத்திற்குத் திரும்பி வந்து கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரம் இருந்த மரத்தில் இடித்து, அருகே இருந்த 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அதனைக் கண்ட அப்பகுதியினர், விரைந்து சென்று மீட்டுள்ளனர். ஆனால், அந்த விபத்தில் டிராக்டரில் பயணித்த 3 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 2 சிறுவர்கள் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 7 சிறுவர்கள் சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், விபத்தில் உயிரிழந்த விஷால் (14), நிவாஸ் (15), கிஷோர் (14) ஆகிய மூன்று சிறுவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் மறவபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்குச் சென்று திரும்பும் போது எதிர்பாராத விதமாக இந்த நேர்ந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இருப்பினும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கொண்டாட்டத்திற்காக வந்த சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் மறவபட்டி கிராமத்தினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: தேனியில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பறந்த தேசிய கொடியால் பரபரப்பு!