விருதுநகர்: ஶ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் கார்த்திக் பாண்டி(26), சிவகாசியில் உள்ள மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியில் உள்ள கடையில் பணி புரிந்து வந்த சிவகாசி வம்பிழுத்தான் முக்கு பகுதியை சேர்ந்த பொன்னையா மகள் நந்தினி(22) என்பவரை காதலித்துள்ளார்.
இவர்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து, அய்யம்பட்டியில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளனர். சிவகாசி ஹவுசிங் போர்டு அருகே உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் நந்தினி வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் மனைவி நந்தினியை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக கார்த்திக் பாண்டி, சூப்பர் மார்க்கெட் வந்துள்ளார். அப்போது அங்கு பைக்கில் வந்த மூவர் கார்த்திக் பாண்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தாக்குதல் நடத்த முயன்றதாக தெரிகிறது.
அவர்களிடம் இருந்து தப்பித்து கடைக்குள் ஓட முயன்ற கார்த்திக் பாண்டியை சூப்பர் மார்க்கெட்டின் கடை வாசலில் வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு பைக்கில் வந்த மூவரும் தப்பிச் சென்றனர். இதில், நிலைகுலைந்த கார்த்திக் பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து வந்த திருத்தங்கல் போலீசார் கார்த்திக் பாண்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பையா ஆகியோர் விசாரணை நடத்தினர்.
சகோதரி நந்தினி காதல் திருமணம் செய்த ஆத்திரத்தால் சகோதரர்கள் பாலமுருகன்(27), தனபாலமுருகன்(25) மற்றும் தனது நண்பர் சிவா(23) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கார்த்திக் பாண்டியை வெட்டி கொலை செய்து விட்டதாக கூறி மல்லி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இந்நிலையில், மூவரை கைது செய்த போலீசார் திருத்தங்கல் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த போதில் அடுத்தடுத்த படுகொலை சம்பவங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்