சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி, வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு சிறப்பாக செயலாற்றிய மாணவர்களை தேர்ந்தெடுத்து வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம்.
அந்தவகையில் தற்பொழுது லண்டனின் நியூகேஸ்டல் துர்ஹாம் பல்கலைக்கழகத்திற்கு ஒரு வார திறன்மேம்பாட்டு பயிற்சிக்கு பிரிட்டீஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகிய பயிற்சிகளுக்கு 15 பொறியியல் மற்றும் 10 அறிவியல் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர்.
இவர்களுடன் இரு பேராசியர்களும் உடன் செல்கின்றனர். அதிகாலை 5 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட மாணவர்களை அவர்களின் குடும்பத்தார் மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர். இது குறித்து பேசிய மாணவி
கிருத்திகா, நான் முதல்வன் திட்டத்தில் இணைந்து நிறைய பயிற்சிகள் பெற்றேன்.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஆன்லைன் மூலமாகவும் வகுப்புகள் எடுக்கப்பட்டன.10 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டு முதல் 25 மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். லண்டனிலுள்ள கல்லூரியில் சிறப்பு பயிற்சிக்காக செல்லவுள்ளோம். இது எங்கள் வாழ்விற்கு மிகுந்த பலனளிக்கும் என்றார்.
அதனை தொடர்ந்து மாணவன் யோகேஷ்வரன் பேசுகையில், “முதலமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தினால் பயனடைந்த மாணவன்.இன்றைய சூழலில் என்ன தேவையோ அதனை எங்களுக்கு பயிற்சி கொடுத்தார்கள். தற்பொழுது லண்டனில் சிறப்பு பயிற்சிக்காக செல்கிறோம். இதற்காக பல்வேறு கட்ட தேர்வு செய்தனர்” என தெரிவித்தார்.