பவானி: ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேது மணிகண்டன் (23). இவர் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்து விட்டு வெல்டிங் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், சேதுமணிகண்டன் பவானி, காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலிக்கு வந்துள்ளார்.
பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வருடத்துக்கு முன்பு பிரிந்துவிட்டனர். இருவரும் பிரிந்த நிலையில் அந்த பெண் தற்போது பவானி செங்காடு பகுதியைச் சேர்ந்த குகநாதன் (26) என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. குகநாதன் தற்போது குமாரபாளையம் பகுதியில் பீட்சா, பர்கர் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி இளம்பெண்ணுக்கு பிறந்தநாள் என்பதால் முன்னாள் காதலன் சேது மணிகண்டன், குகநாதனுக்கு போன் செய்து ''உன்னுடன் பேச வேண்டும் உடனே பவானி அரசு மருத்துவமனை அருகே வருங்கள்'' என நள்ளிரவு அழைத்துள்ளார்.
அதன்படி குகநாதனும் அங்கு வந்துள்ளார். அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்த போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சேதுமணிகண்டன் குகநாதனை அடித்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த குகநாதன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து சேது மணிகண்டனின் மார்பில் குத்தியுள்ளார்.
இதில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு சேது மணிகண்டன் சுருண்டு விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் சேது மணிகண்டனை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது சேது மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த பவானி போலீசார் சேது மணிகண்டனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே குகநாதனை கைது செய்த பவானி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதில் தெரியவந்ததாவது; இளம்பெண்ணை பிரிந்து சென்ற முன்னாள் காதலனான சேது மணிகண்டன் அவ்வப்போது குகநாதனிடம் போன் செய்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த சூழலில், சம்பவத்தன்று அதிகாலை 12.45 மணியளவில், குகநாதனுக்கு போன் செய்த சேது மணிகண்டன், ' இளம்பெண்ணுக்கு இன்று பிறந்த நாள்.. வாழ்த்து சொல்ல நான் போன் செய்தால் அவள் எடுக்கவில்லை.. எனவே நீ வந்து உனது செல்லில் ஃபோன் செய்து கொடு.. அவளிடம் பேச வேண்டும்'' என குகநாதனிடம் சேதுமணிகண்டன் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், ''உடனே கிளம்பி வா இதற்கு ஒரு தீர்வு செய்து முடித்துக் கொள்ளலாம்'' என சேது மணிகண்டன் குகநாதனிடம் தெரிவித்துள்ளார். இதனால் பதற்றமான குகநாதன், சம்பவ இடத்தில் சேது மணிகண்டனின் நண்பர்கள் இருந்தால் தன்னை தாக்குவார்கள் என தெரிந்து தனது பாதுகாப்புக்காக ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு, சேது அழைத்த இடத்துக்கு சென்றுள்ளார்.
அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சேதுமணிகண்டன் குகநாதனை தாக்கவே, குகநாதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியதில் அவர் இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் விசாரணைக்கு பிறகு குகநாதனை பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
காதல் தகராறில் முன்னால் காதலனை இந்நாள் காதலன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பவானி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குவைத் தீ விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு அரசு நிதியுதவி வழங்கிய கனிமொழி எம்.பி.