சென்னை: தமிழ்நாட்டு மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது, எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர் கதையாகி வருகின்றன. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 480க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது, மீனவர்கள் நெடுத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 21 மீனவர்களை கைது செய்து, இரண்டு விசைப்படகுகளில் அழைத்துச் சென்று காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேருக்கு மார்ச் 27 வரை நீதிமன்றக் காவல் வழங்கி காங்கேசன்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “கடந்த ஒரு வாரத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் 58 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், இதற்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தளத்தில், வங்கக்கடலில் கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மீன் பிடிக்கச் சென்ற 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாரம்பரியமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டப் பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை பன்னாட்டு விதிகள் அனுமதிக்கும் போதிலும், அந்த விதிகளை மீறி தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்யும் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த 10-ஆம் தேதி தான் வங்கக்கடலின் இரு பகுதிகளில் 22 தமிழக மீனவர்களும், 15-ஆம் தேதி 15 தமிழக மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
அதனால், அந்தப் பகுதிகளில் ஏற்பட்ட பதட்டமும், கவலையும் விலகுவதற்கு முன்பே மேலும் 21 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 58 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர்.
கடந்த இரு மாதங்களில் 80க்கும் கூடுதலான மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும், கைது நடவடிக்கைகளும் முடிவில்லாமல் தொடர்வதை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழக மீனவர்களை கைது செய்யக்கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும். அதையும் மீறி சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்ந்தால் அவர்கள் மீது தூதரக அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மற்றொருபுறம் தமிழக மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இந்தியா - இலங்கை அரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 58 மீனவர்களை விடுதலை செய்யவும், தமிழக மீனவர்களின் அனைத்துப் படகுகளையும் மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தேமுதிகவினர் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்களை அளிக்கலாம் - பிரமேலதா விஜயகாந்த!