தேனி: பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் இருந்து கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக ஒரு பேருந்து மற்றும் ஒரு வேனில் 80-க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். இதில் பேருந்தில் பெண்களும், வேனில் 20 ஆண்களும் சென்றுள்ளனர்.
மேலும், திருமண நிகழ்வு முடிந்த பின்னர் இன்று(ஜூன் 26) மாலையில் பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்திற்கு திரும்புகையில் டம் டம் பாறை அருகே வளைவில் வேன் திரும்புகையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேன் ஓட்டுநர் உட்பட 21 ஆண்கள் படுகாயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்தில் காயம் அடைந்த 21 பேரையும் 108 ஆம்புலன்கள் மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனை மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நல்வாய்ப்பாக வேன் சாலையின் இடதுபுற மலைப் பக்கம் கவிழ்ந்ததால் உயிரிழப்பின்றி காயங்களுடன் 21 பேர் தப்பியதாகவும், வலது புறம் வேன் கவிழ்ந்திருந்தால் பெருமளவில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கூறினர்.
இந்த விபத்து தொடர்பாக தேவதானப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்.. பொதுமக்கள், வீரர்களுக்கான பயன் என்ன? சிறப்பு தொகுப்பு!