சென்னை: எதிர் வரக்கூடிய 2024 நாடாளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது முடிவு செய்யப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன் பேசுகையில்,"தேர்தல் ஆணையரைப் பயன்படுத்தித் தேர்தல் ஆணையத்தை முழுக்க முழுக்க தனது அரசியல் ஆயுதமாக பாஜக மாற்றியுள்ளது. அதற்கு உடன் போனதன் காரணமாக,தேர்தல் ஆணையர் பதவி விலகியுள்ளார்.
திமுக கூட்டணியில் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - திமுக இடையே இன்று(மார்ச் 12) தொகுதி இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
திமுக தலைமையிலான கூட்டணியில் கடந்த 29ஆம் தேதி இரண்டு தொகுதியில் போட்டியிடுவது என உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து தொகுதிகளை அடையாளம் காணும் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதில் மதுரை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவது உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட வேறு சில தொகுதிகளையும் விருப்பப்பட்டியலில் கொடுத்திருந்தோம். பேச்சுவார்த்தை என வரும் போது எங்களது கோயம்புத்தூர் தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அவர்களது திண்டுக்கல் தொகுதியை எங்களுக்கும் எனப் பரஸ்பரம் மாற்றிக்கொண்டோம்.
எங்களது தொகுதியை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள், அவர்களது தொகுதியை நாங்கள் எடுத்துக்கொண்டோம் எனப் பார்க்கக் கூடாது. திண்டுக்கல் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டுள்ளோம் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தையில் திண்டுக்கல் தொகுதிக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,"குஷ்பு சொல்வதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய நிலைமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இல்லை, அவர் எந்த மாதிரியான அரசியல்வாதி என்பது அனைவருக்கும் தெரியும், அவர் மாறாத கட்சியே இல்லை.
பாஜக இனி எதையும் சொல்லி மக்கள் மத்தியில் வாக்கு கேட்க முடியாது. ராமர் கோவில் கட்டியதாகச் சொன்னார்கள் அது பலன் அளிக்கவில்லை. சிஏஏ சட்டத்தின் மூலம் மக்களை மத அடிப்படையில் பிரித்து மோதலை உண்டாகி வெற்றி பெற வேண்டும் என பாஜக நினைக்கிறது.தேர்தல் பத்திரம் விவகாரத்தில் பாஜகவை நீதிமன்றம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளது.இதிலிருந்து மக்களைத் திசை திரும்புவதற்காக சிஏஏ-வை பயன்படுத்துகிறார்கள்" என்றார்.
இதையும் படிங்க: கோவை தொகுதியில் களமிறங்கும் அண்ணாமலை.. பாஜகவின் பக்கா பிளான்!