கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளது. இவர்கள் பெரும்பாலும் மீன்பிடி தொழிலை நம்பியுள்ளனர். கடலூர், தேவனாம்பட்டினம், தாழங்குடா, அக்கரை கோரி பகுதி மீனவர்கள் நாள்தோறும் கடலூர் துறைமுகத்திலிருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீன் பிடிப்பது வழக்கம்.
கடலூர் தேவனாம்பட்டினத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு 2 நாட்களாக அதிக அளவில் மீன்கள் 'பெரும்பாறை' எனப்படும் பெரிய வகை மீன்கள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில், இன்று அதிகாலை கடலூர் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலையில் 200 டன் அளவிற்கு பெரும்பாறை மீன்கள் கிடைத்தன. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் அந்த மீன்களை கரைக்கு கொண்டு வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, 100-க்கும் மேற்பட்ட சிறிய பைபர் படகுகள் கடலுக்கு வரவழைக்கப்பட்டு மீன்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. ஒரு மீன் 8 கிலோ முதல் 80 கிலோ வரை எடையில் இருக்கும் நிலையில் மீன்கள் அதிக அளவில் கிடைத்துள்ளதால் பெரும்பாறை மீன்களின் விலை கனிசமாக குறைந்துள்ளது. சாதாரண நாட்களில் கிலோ 400 ரூபாய் வரை விற்கப்படும் பெரும்பாறை மீன்கள் இன்று 100 ரூபாயாக குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கிடுகிடுவென உயர்ந்த காய்கறிகள் விலை.. தருமபுரி உழவர் சந்தை நிலவரம் என்ன?
ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கிச் செல்லும் நிலையில், உள்ளூர் மக்களும் இந்த மீன்களை வாங்கி செல்கின்றனர். அதிக அளவில் மீன்கள் கிடைத்தாலும் அதனை கரைக்கு கொண்டு வருவதில் பெரும் பிரச்சனையை மீனவர்கள் சந்தித்து வருகிறார்கள். வழக்கமாக இந்த வலைகளில் 10 முதல் 15 டன் மீன்கள் கிடைப்பதே அரிது. ஆனால், நூற்றுக்கணக்கான டன் கிடைப்பதால் செய்வது அறியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.
நேற்று, தாவணாம்பட்டினம் மீனவர்கள் வலையில் 150 டன் அளவு மீன் நடுக்கடலில் பிடித்த நிலையில் கொண்டுவர முடியாமல் 50 டன்கள் மீன்களை கடலிலேயே விட்டு வந்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் 200 டன் மீன் கிடைத்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்