சென்னை: மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து விமானத்தில் சென்னைக்குக் கடத்தி வரப்பட்ட 5,193 சிவப்பு காது உடைய நட்சத்திர ஆமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், பாதுகாப்பு கருதி அந்த ஆமைகளை கடத்தி வந்த நபர்களின் செலவில், மீண்டும் மலேசியா நாட்டிற்கே அனுப்பி வைத்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்திற்கு மலேசியா நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் டிச.3 ஆம் தேதி வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை வழக்கம்போல், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து சோதனை நடத்தினர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த ரமேஷ் ஆகாஷ் (29), தமிம் அன்சாரி முகமது ரஃபிக் ஆகிய இருவரும், சுற்றுலாப் பயணிகளாக மலேசியா சென்றுவிட்டு இந்த விமானத்தில் வந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் நடவடிக்கை மீது சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகம் எழுந்ததை அடுத்து, அவர்களை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது, அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.
அதனால், அவர்களது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது, உடைமைகளுக்குள் அட்டைப்பெட்டி இருந்துள்ளது. அதனைப் பிரித்து பார்த்தபோது, அதில் சிவப்பு காதுகளுடைய நட்சத்திர ஆமைகள் உயிருடன் இருந்துள்ளது. அதாவது, அந்த அட்டைப் பெட்டிக்குள் 5,193 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் இருந்துள்ளது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் என்றும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வனத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில், விரைந்து வந்த அதிகாரிகள் ஆமைகளை ஆய்வு செய்ததுடன், கடத்தல் பயணிகள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வகை சிவப்புக் காது நட்சத்திர ஆமைகள் குளிர் பிரதேசமான தாய்லாந்து, மலேசியா, ஐரோப்பிய நாடுகள் போன்ற இடங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. இவற்றைப் பெரிய பங்களாக்களில் அலங்கார தொட்டிகளில் வைத்து வளர்த்து வருகின்றனர். மேலும் இவை மருத்துவ குணங்கள் உடையவை, எனவே மருந்துகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இவைகளை இந்தியாவுக்கு அனுமதித்தால் வெளிநாட்டு நோய் கிருமிகளால் நமது நாட்டில் உள்ள விலங்குகள், பறவைகள், மனிதர்கள் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். அதனால் பெரும் பாதிப்பு ஏற்படும். நீர் நிலைகள் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்புகளும் அதிக அளவில் ஏற்படும். எனவே, இவற்றை இந்தியாவுக்குள் அனுமதிக்க முடியாது என்று சுங்க அதிகாரிகளும், ஒன்றிய வனத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளும் முடிவு செய்தனர்.
மேலும் 5,193 சிவப்பு காது நட்சத்திர ஆமைகளை மீண்டும் மலேசியா நாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டனர். எந்த விமானத்தில் சென்னைக்கு கொண்டுவரப்பட்டதோ அதே விமானத்தில் சென்னையிலிருந்து கோலாலம்பூருக்கு அனுப்பி வைக்கவும், அதற்கான செலவுகளைக் கடத்தி வந்த இரண்டு பணிகள் இடமிருந்து வசூலிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டனர்.
அதனடிப்படையில் நேற்று முன்தினம் (டிச.4) சென்னையிலிருந்து கோலாலம்பூர் புறப்பட்ட விமானத்தில் 5,193 சிவப்பு காதுகள் உடைய நட்சத்திர ஆமைகளையும் அனுப்பி வைத்தனர். மேலும், மலேசியாவில் இருந்து சட்ட விரோதமாகச் சென்னைக்கு சிவப்பு காதுகளுடைய நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்த 2 நபர்களை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.