புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே வருவாய் கோட்டாட்சியர் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் பீகாரைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில், கோட்டாட்சியர் ஐஸ்வர்யா மற்றும் கார் ஓட்டுநர் காமராஜ் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா இன்று பணி நிமித்தமாக திருமயம் நோக்கி தனது அரசு காரில் சென்றுள்ளார். காரை ஓட்டுநர் காமராஜ் ஓட்டியுள்ளார். இந்நிலையில், காரைக்குடி – திருச்சி நெடுஞ்சாலையில் நமணசமுத்திரம் என்ற இடத்தில் கோட்டாட்சியர் சென்ற கார் சென்றபோது, ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களும் பேருந்தை முந்தி செல்ல முயற்சித்த நிலையில், வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதையும் படிங்க: திடீரென பற்றி எரிந்த பைக்..கோயம்பேடு மார்க்கெட்டில் பரபரப்பு!
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பயாஸ் (25), பைசல் (22) ஆகிய இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் வருவாய் கோட்டாட்சியரின் வாகன ஓட்டுநர் காமராஜ்க்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் இருவரும் புதுக்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உயிரிழந்த இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறாய்விற்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வருவாய் கோட்டாட்சியரின் வாகனம் மோதி இரண்டு நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.