அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் செல்லும் சாலையில் மகிமைபுரத்தில் சிலர் சட்டவிரோதமாக குட்கா மற்றும் போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 கார்களை சோதனை செய்தனர்.
அதில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள, 180 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களைப் பதுக்கிக் கடத்தி வந்துள்ளனர். இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களையும், ரூ.1.15 லட்சம் மதிப்புள்ள ரொக்க பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவத்தில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜதுரை(30), மற்றும் அரியலூர் மாவட்டம் பாப்பாக்குடியைச் சேர்ந்த குமரன்(48) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஜெயங்கொண்ட பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தருமபுரியில் 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை; 12ஆம் வகுப்பு மாணவர் கைது!