சென்னை: நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 18 மீனவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் தேதி விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று இந்தியா - இலங்கை எல்லை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இலங்கை கடலோர காவல் படையினர் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து 18 மீனவர்களையும் கைது செய்தனர்.
மேலும், தமிழக மீனவர்களின் படகு வலைகளையும் பறிமுதல் செய்து இலங்கை கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 18 பேரையும் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட நாகைப்பட்டினம் மற்றும் காரைக்கால் மீனவர்களை விடுவிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கைதானவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தது வந்தனர்.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் எழுதினார். இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கை நீதிமன்றம் நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலில் சேர்ந்த 18 மீனவர்களையும் விடுதலை செய்தது. இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் மீனவர்களை ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: வீங்கியிருந்த பெண்ணின் வயிறு.. எக்ஸ்ரேவை பார்த்து அதிர்ந்து போன சென்னை ஏர்போர்ட் அதிகாரிகள்!
இதையடுத்து மீனவர்கள் 18 பேருக்கும் பாஸ்போர்ட் இல்லாததால் அனைவருக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் தூதரக அதிகாரிகள் வழங்கினர். மேலும், 18 பேருக்கும் விமான டிக்கெட் ஏற்பாடுகளையும் செய்தனர். இதையடுத்து நேற்று நள்ளிரவு இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 18 மீனவர்களும் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்கள் 18 பேரையும் வரவேற்று அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன், அண்மையில் நாடாளுமன்றத்தில் அளித்த தகவலின்படி, 45பேர் விசாரணைக் கைதிகளாகவும், 96 பேர் தண்டனை கைதிகளாகவும் என மொத்தம் 141 மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
மேலும், இலங்கையின் வசம் 198 படகுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுரா திசநாயகேவிடம் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய விரைவான தீர்வு கிடைக்கும் வகையில் மத்திய அரசு எடுத்துக் கூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.