சென்னை: தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில், போதைப் பொருள்களை பயன்படுத்துவோர், அவற்றை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையில், தனிப்படையினர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சென்னை அடுத்த கிழக்கு தாம்பரம் ரயில்வே மைதானத்தில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக வந்த தகவலின் அடிப்படையில், அங்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது இரண்டு நபர்கள் கையில் பெரிய மூட்டைகளுடன் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்தனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தபோது, கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: அதிகார ஆசை காட்டும் விஜய்! விடுதலை சிறுத்தைகள் நிலைப்பாடு என்ன?
விசாரணையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துவேல் பாண்டி(37), சந்திரகுமார்(34) என்பது தெரிய வந்தது. மேலும், இவர்கள் கையில் வைத்திருந்த மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் சுமார் 15 லட்சம் மதிப்புடைய 150 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
மேலும், இருவரும் கஞ்சாவை வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து சென்னையில் கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்களுக்கு விற்பனை செய்ய இருந்தது விசாரணையில் தெரிந்தது.
அதேபோல் சென்னை அடுத்த திருநீர்மலைப் பகுதியில் கஞ்சா பொட்டலங்களுடன் இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை தாம்பரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 5 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த நபர் பல்லாவரம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து, இரண்டு செல்போன்கள், ஈச்சர் வாகனம் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்