சென்னை: சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் ஹரிதாவுக்கு, நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு, மயிலாப்பூர் பகுதியில் கடந்த ஜூலை 10ஆம் தேதி 9 வயது சிறுமிக்கும், 15 வயது சிறுவனுக்கும் அவரது பெற்றோர் குழந்தைத் திருமணம் செய்து வைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனே சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட சிறார்களிடம் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில், இரு வீட்டார் சம்மதத்துடன் குழந்தை திருமணம் நடந்து முடிந்தது தெரிய வந்தது. பின்னர், இது குறித்து ஹரிதா மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி, சிறுமி மற்றும் சிறுவனை மீட்டு கெல்லீஸில் உள்ள சிறார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், இரு குழந்தைகளின் பெற்றோர் மீதும் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குழந்தைகள் இருவரின் பெற்றோருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.2,000 கோடி நிதி நிறுத்திவைப்பா? PM Shri திட்டத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? - pm shri school scheme