சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி முதல் இன்று (மார்ச் 22) வரையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பிற்கான செய்முறைத் தேர்வுகள், பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும், 3,302 மையங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த, 7 லட்சத்து 72 ஆயிரத்து 360 மாணவர்களும், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 பேரும் என 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள் எழுதி உள்ளனர்.
இந்தத் தேர்வு பணிகளை கண்காணிப்பதற்காக 1,135 பறக்கும் படையினரும், தேர்வினை கண்காணிக்கும் பணியில் 43 ஆயிரத்து 200 ஆசிரியர்களும் ஈடுபட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 591 பள்ளிகளில் படிக்கும் 62 ஆயிரத்து 124 மாணவர்கள், 240 மையங்களில் தேர்வினை எழுதினர். அதனைத் தொடர்ந்து, மாவட்டங்களில் விடைத்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து 86 விடைத்தாள்கள் திருத்தம் செய்யும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
அதனைத் தொடர்ந்து, விடைத்தாள்களை முதன்மை விடைத்தாள் திருத்துபவர்கள் (பணியில் அனுபவம் வாய்ந்த முதுகலை ஆசிரியர்கள்) ஏப்ரல் 1ஆம் தேதி அரசுத் தேர்வுத்துறையால் அளிக்கப்படும் விடைத்தாள் குறிப்புகளை வைத்து, திருத்தும் பணியை மேற்கொள்கின்றனர். அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில், முதுகலை ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியினை செய்கின்றனர்.
அதன் பின்னர், மாணவர்களின் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, தேர்வு முடிவுகளை மே 6ஆம் தேதி வெளியிடுவதற்கு அரசுத் தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் நாட்களில் பொது விடுமுறை.. சம்பளம் பெற வாக்கு சான்றினை கட்டாயமாக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! - Proof Of Voting