சென்னை: 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நாளை விடைத்தாள் நகல் வெளியாக உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று (மே.27) அறிவித்துள்ளது. மேலும் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பிட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகள் குறித்தும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், தங்களது விடைத்தாள் நகலினை நாளை (மே.28) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விடைத் தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பிட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் “Application for Retotalling / Revaluation” என்ற தலைப்பினை க்ளிக் செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தேர்வர்கள் இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, அதனை மே.29 பிற்பகல் 1.00 மணி முதல் ஜூன்.01 மாலை 5.00 மணிவரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை அங்கேயே செலுத்த வேண்டும்.
மறுமதிப்பீடு: பாடம் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.505
மறுகூட்டல்: உயிரியல் பாடம் மட்டும் - ரூ.305/-
ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205/-
தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தை ஒப்படைத்து அதற்குரிய கட்டணத்தொகையை பணமாக செலுத்த வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.