சென்னை: சாலை விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக 'நீங்க ரோடு ராஜாவா' என்ற திட்டம் சில தினங்களுக்கு முன்பு சென்னை போக்குவரத்து போலீசாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. சாலை விதிகளைப் பின்பற்றாமல் வாகனம் இயக்குபவர்களை, பொதுமக்கள் புகைப்படம் எடுத்து, சமூக வலைத்தளங்களில் @roadraja என்று டேக் செய்து பதிவிட்டால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற புதிய முறையைப் போக்குவரத்து போலீசார் அறிமுகப்படுத்தினர்.
முன்னதாக, சென்னையில் உள்ள சாலைகளில் போக்குவரத்து காவல் துறையினர் சார்பில் நீங்கள் ரோடு ராஜாவா என்கிற பதாகைகள் வைக்கப்பட்டது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் இந்தப் பதாகையின் நோக்கம் என்ன என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தனர்.
இந்நிலையில் மக்கள் சாலையில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது போக்குவரத்து விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவே இந்த விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான காணொளி வீடியோக்களை சென்னை பெருநகரக் காவல்துறை அதன் எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டு இருந்தது.
அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் இத்திட்டத்தின் மூலம் சாலை விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளின் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சுமார் 127 புகார்கள் வந்துள்ளதாகக் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 81 புகார்கள் நியாயமானதாக இருந்ததால் அப்புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் பிப்.26இல் திறப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!