திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள சத்யா நகரைச் சேர்ந்த முரளி, பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வீரமணி. இவர்களுக்கு மோகன் ராஜ் (12) என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள சிறுமலர் நடுநிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுவயது முதலே படிப்பிலும், கண்டுபிடிப்பிலும் ஆர்வமாக இருந்த மோகன் ராஜ், வீட்டில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி சிறிய ஃபேன், மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருள்களை கண்டுபிடித்து வந்துள்ளார். அதன் தொடர் முயற்சியாக, தற்போது 'ரெயின் அலர்ட் சிஸ்டம்' ஒன்றைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளார் 12 வயதே ஆன இளம் விஞ்ஞானியான மோகன் ராஜ்.
இது குறித்து மோகன் ராஜ் கூறுகையில், "புதிய பொருள்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற இந்த ஆர்வம் என்னுடைய அப்பாவிடம் இருந்து எனக்கு வந்தது. இந்த ஆர்வம்தான் தற்போது 'ரெயின் அலர்ட் சிஸ்டம்' கண்டுபிடிக்க வைத்துள்ளது. இதேபோல் ஏர் கூலர், வேக்கம் கிளீனர் போன்ற பொருள்களையும் கண்டுபிடித்து உள்ளேன். இந்த ரெயின் அலர்ட் சிஸ்டத்தின் முக்கியமான பயன்பாடு என்னவென்றால், பலரது வீட்டின் மொட்டை மாடியில் துணி, வத்தல் உள்ளிட்டவற்றை காய வைப்பர்.
ஆனால் மழை வருகிறதா எனத் தெரியாமல் அப்படியே விட்டுவிடுவர். இதனை சரி செய்யும் விதமாகத்தான் 'ரெயின் அலர்ட் சிஸ்டமை உருவாக்கியுள்ளேன். இதனை ஒரு முறை வீட்டின் மொட்டை மாடியில் பொருத்திவிட்டால், மழை வரும் நேரங்களில் அலாரம் அடிக்கும்.
இதனை உருவாக்க எனக்கு வெறும் 110 ரூபாய் செலவானது. இதனை பெரியதாகச் செய்ய வேண்டும் என்றால் 500 ரூபாய் இருந்தால் போதுமானது. இதனை தண்ணீர் தொட்டிகளில் நாம் பயன்படுத்த முடியும். இதே சிஸ்டமை மாற்றியமைத்து தண்ணீர் தொட்டிகளில் பொருத்திவிட்டால், தொட்டி நிரம்பியவுடன் அலாரம் அடிக்கும். இதனால் தண்ணீரை நாம் சேமிக்க முடியும்" என தெரிவித்தார். மோகன்ராஜின் அடுத்த முயற்சியாக வீட்டிற்கு பயண்படும் வகையில் ரோபோ உருவாக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வாங்க ஒரு டீ குடிச்சிட்டு பேசலாம்.. சர்வதேச தேநீர் தினம் இன்று!