சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரது படுகொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, அருள், சந்தோஷ் ராமு உள்ளிட்ட 10 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை 5ஆம் தேதி வீட்டு அருகே மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை தமிழகம் முழுவதும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தன. தேசிய அளவில் இந்த கொலை பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 300 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தலைமுறைவாக இருக்கும் முக்கிய ரவுடிகளான சம்பவம் செந்தில், சீசிங் ராஜா மற்றும் புதூர் அப்பு உள்ளிட்ட பிரபல ரவுடிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து நேற்று முன்தினம் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் பத்திரிகையாளரிடம் கூறுகையில், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 90 சதவீத விசாரணை முடிவுற்றுள்ள நிலையில், ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். சென்னையில் ரவுடிசத்தில் ஈடுபட்ட 153 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 10 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஆற்காடு சுரேஷின் சகோதரரான பொன்னை பாலு, அருள், சந்தோஷ், ராமு, திருமலை உள்ளிட்ட 10மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. ஒரே கொலை வழக்கில் 10 பேருக்கு குண்டர் சட்டம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ரவுடி நாகேந்திரனை பாதுகாக்க மனைவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!