ஐதராபாத்: சமீப காலங்களில் கிரிக்கெட் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. நவீன தொழில்நுட்பம், வீரர்கள் பாதுகாப்பு என பல துறைகளில் கிரிக்கெட் நல்ல முன்னேற்றத்தை கண்டு உள்ளது.மேலும், வீரர்களின் பணிச் சுமையை குறைக்க ஒவ்வொரு கிரிக்கெட் வாரியங்களும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதேபோல் கிரிக்கெட் போட்டியும் பல பரிமாணங்களை கடந்து வளர்ச்சி கண்டு உள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என தனித் தனியாக கிரிக்கெட்டில் விளையாடப்படுகின்றன. நவீன காலத்தில் டெஸ்ட் போட்டி என்றால் அதிகபட்சம் 5 நாட்கள் மட்டுமே விளையாடப்படுகின்றன.
மழை அல்லது பேரிடர் காரணமாக இடையூறுகள் ஏற்பட்டால் கூட டெஸ்ட் போட்டிகள் 5 நாட்கள் மட்டுமே நடத்தப்படுகிறது. ஆனால் வரலாற்றில் 12 நாட்கள் ஒரு டெஸ்ட் போட்டி நடந்துள்ளது என்றால் அதை உங்களால் நம்ப முடியுமா? அப்படி 12 நாட்கள் டெஸ்ட் போட்டி நடந்தும் அந்த டெஸ்ட்டில் முடிவு எட்டப்படாதது ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது.
பழைய டெஸ்ட் விதிமுறைகளின் படி ஒவ்வொரு அணியும் தலா இரண்டு இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்க வேண்டும். அப்படி ஒவ்வொரு அணியும் இரண்டு இன்னிங்ஸ்களில் விளையாடி முடிவு கண்டு இருந்தால் மட்டுமே அந்த டெஸ்ட் போட்டி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இது சற்றும் விசித்திரமாக இருந்தாலும், இதைத் தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் விதிமுறைகளாக கடைபிடிக்கப்பட்டு வந்தன.
அப்படி அதிக நாட்கள் நடந்த டெஸ்ட் போட்டி கடந்த 1939ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையே நடந்து உள்ளது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் விளையாடியது. தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்த இந்த டெஸ்ட் போட்டியின் 12வது நாளில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 654 ரன்கள் எடுத்து இருந்தது.
இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 42 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அந்த அணிக்கு கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன. இருப்பினும், அந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. மழையோ, புயலோ எதுவும் போட்டி டிராவில் முடிய காரணமில்லை. மாறாக 12வது நாளில் இங்கிலாந்து வீரர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டுமானால் கேப்டவுன் துறைமுகத்தில் தயாராக உள்ள கப்பலை பிடித்தாக வேண்டும்.
கப்பலை பிடிப்பதற்காக அந்த போட்டி டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. இரு நாட்டு வீரர்களும் போட்டி டிராவில் முடிந்ததாக கூறி கைகளை குலுக்கிக் கொண்டு பிரிந்து சென்றனர்.
இதையும் படிங்க: அன்கேப்டு பிளேயராக தக்கவைக்கப்பட்டால் தோனிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? - MS Dhoni Uncapped Player Salary