ஐதராபாத்: பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் பிராண்ட் மதிப்பு தற்போது பல லட்சங்களை தாண்டி சென்று கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு வரை விளம்பரப் படத்தில் நடிப்பது அல்லது பொது நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் கலந்து கொள்ள வினேஷ் போகத் 25 லட்ச ரூபாய் வரை வாங்கி உள்ளார்.
இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பின்பு அதாவது தற்போது விளம்பரங்கள், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வினேஷ் போகத் 75 லட்ச ரூபாயில் இருந்து 1 கோடி ரூபாய் வரை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் பாரீஸ் ஒலிம்பிக்கில் தடகளப் பிரிவில் பதக்கம் வென்று கொடுத்த ஒரே இந்திய வீரரான நீரஜ் சோப்ராவின் பிராண்ட் மதிப்பும் 30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்து உள்ளதாக சொல்லப்படுகிறது.
அதாவது 40 மில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் 330 கோடி ரூபாய் எனக் கூறப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு பதக்கங்களை வென்று குவித்த மனு பாக்கரின் பிராண்ட் மதிப்பும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக அவர் 25 லட்ச ரூபாய் வரை வாங்கி வந்த நிலையில், ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் அது 6 மடங்கு அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பிரபல குளிர்பான நிறுவன விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தமான மனு பாக்கர் அதற்கு 1 கோடியே 50 லட்ச ரூபாய் வரை தொகை கேட்டதாக தகவல் கூறப்படுகிறது. முன்னதாக பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இறுதிப் போட்டிக்கு முன்பாக வினேஷ் போகத் 50 கிலோ எடைக்கு கூடுதலாக 100 கிராம் இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தனது தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் முறையிட்டார். இருப்பினும் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து கியூபா வீராங்கனையுடன் இணைந்து 50 கிலோ எடைப் பிரிவில் தனக்கும் வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என வினேஷ் போகத் நடுவர் தீர்ப்பாயத்தில் முறையிட்டார். வினேஷ் போகத்தின் மனுவின் மீதான தீர்ப்பை மூன்று முறை ஒத்திவைத்த சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி தீர்ப்பை தள்ளுபடி செய்தது.
இதனால் வினேஷ் போகத் கடும் அதிருப்திக்குள்ளாகினார். முன்னதாக பாரீஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து சர்வதேச மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார். தொடர்ந்து நாடு திரும்பிய அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து அவரது சொந்த கிராமம் வரை வழிநெடுக மக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: சிஎஸ்கேவில் ரிஷப் பன்ட்? இன்ஸ்டா போஸ்ட் மூலம் உறுதிப்படுத்திய பன்ட்? தோனி ஸ்டைலில் தலைவர் போஸ்ட்! - IPL Auction 2025