துபாய்: 2025ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறும் நாளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், 2025ஆம் ஆண்டு ஜூன் 11 முதல் 15 வரை ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் இறுதி நாளில் மழை, புயல் உள்ளிட்ட பேரிடர்கள் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டால் ஜூன் 16ஆம் தேதி ரிசர்வ் டே வாக கருதப்பட்டு போட்டி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. முன்னதாக 2021ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி சவுதாம்டனில் நடந்தது. அதைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்றது.
தற்போது 2025ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் நடந்த இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முறையே வெற்றிக் கோப்பையை உச்சி முகர்ந்தன.
உலக தரவரிசையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. தற்போதைய தரவரிசையின் படி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி 3வது இடத்திலும், இங்கிலாந்து 4வது இடத்திலும் உள்ளது.
இலங்கை 5வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 6வது இடத்திலும், வங்கதேசம் 7வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் ஒட்டுமொத்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி இதுவரை 58 ஆட்டங்களில் விளையாடி அதில் 29 போட்டிகளில் வெற்றி கண்டு அதிக வெற்றிகளை கண்ட அணி என சாதனை படைத்துள்ளது.
இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இங்கிலாந்து புது மைல்கல்! இந்தியா பின்னடைவு! - World Test Championship 2024