லாடர்கில்: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் 33வது லீக் போட்டியில் இந்தியா - கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். இரு அணிகளுக்குமே இது கடைசி லீக் ஆட்டமாகும். லாடர்கில் உள்ள சென்ட்ரல் புரொவார்ட் கவுன்டி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு இந்த போட்டியானது தொடங்குகிறது.
நடப்பு தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி 6 புள்ளிகளுடன் 'குரூப் ஏ' பிரிவில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. கனடா அணியைப் பொறுத்தவரையில், மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் தோல்வி ஒரு வெற்றி என 2 புள்ளிகளுடன் அடுத்து சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. இருப்பினும், ஒவ்வொரு போட்டியிலும் அந்த அணி வெளிப்படுத்திய முழுத் திறனையும் பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.
மழையால் பாதிப்பு? இந்தியா- கனடா இடையிலான போட்டி நடைபெறவுள்ள புளோரிடாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவரும் நிலையில், இன்றைய போட்டியிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சூப்பர் 8 சுற்று: குரூப் ஏ, பி, சி, டி ஆகிய நான்கு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணியானது அடுத்து சுற்று அதாவது 'சூப்பர் 8' சுற்றுக்கு தகுதி பெறும். அந்தவகையில், தற்போது வரை ‘ஏ’ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் அமெரிக்கா, ‘பி’ பிரிவிலிருந்து ஆஸ்திரேலியா, ‘சி’ பிரிவிலிருந்து ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ‘டி’ பிரிவிலிருந்து தென் ஆப்பிரிக்கா என ஆறு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. மீதம் உள்ள இரண்டு அணிகள் எவை என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும்.
இது தவிர கனடா, பாகிஸ்தான், அயர்லாந்து, ஓமன், நமீபியா, நியூசிலாந்து, உகாண்டா, பப்புவா நியூ கினியா, நேபாளம், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து, டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிவிட்டன.
இந்தியா மோதும் அணிகள் எவை? டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகள் வரும் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, 18ஆம் தேதி முதல் சூப்பர் 8 சுற்றுகள் ஆரம்பம் ஆகின்றன. அதன்படி, வருகின்ற 20ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடன் இந்தியா மோதவுள்ளது.
இரண்டாவது ஆட்டத்தில் லீக் சுற்றில் ‘டி’ பிரிவில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணியை எதிர்கொள்ளும். இந்த ஆட்டம் 22-ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து கடைசி ஆட்டத்தில் இந்திய அணி 24-ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இதையும் படிங்க: வெளியேறியது பாகிஸ்தான்.. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா!