ஐதராபாத்: 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் 16க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு நாடு கலந்து கொள்வதற்கு என பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. கோடை கால ஒலிம்பிக், குளிர்கால ஒலிம்பிக், பாராலிம்பிக், குளிர்கால பாராலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்குவதற்கு குறிப்பிட்ட காலங்களுக்கு முன்னரோ அல்லது பின்னரோ போர் உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகளில் குறிப்பிட்ட நாட்டின் பங்களிப்பு என்பது இருக்கக் கூடாது.
இது தவிர ஊக்கமருந்து சர்ச்சை, ஒலிம்பிக் சங்கங்களின் அரசியல் தலையீடுகள் உள்ளிட்ட காரணங்களாலும் ஒலிம்பிக் போட்டியில் ஒரு நாடு பங்கேற்க தடை விதிக்க முடியும் என்கிறது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில். நடப்பு பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இஸ்ரேலுக்கு தடை விதிக்காதது ஏன்?:
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையின் காரணமாக ரஷ்யா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவி வரும் காரணத்தால் பெலாரஸ் நாட்டிற்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதேநேரம் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்த போதிலும் அந்நாட்டிற்கு தடை விதிக்காமல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதித்து உள்ளது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி உள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீது போர் தொடுத்த போது, மத்திய உக்ரைனை சுற்றி உள்ள பகுதிகளில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு சொந்தமான இடங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்கு ரஷ்யா கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாச்சும் கருத்து தெரிவித்து இருந்தார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஒப்பந்த நடவடிக்கைகளை மீறியதன் காரணமாக ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. அதேநேரம் பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஒப்பந்தங்கள், விதிமுறைகளை மீறாததால் அனுமதி மறுக்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் ரஷ்யா, பெலாரஸ் பங்களிப்பு:
பாரீஸ் ஒலிம்பிக்கில் ரஷ்யா சார்பில் 15 பேரும் பெலாரஸ் வீரர்கள் 17 பேர் என மொத்தம் 32 வீரர் வீராங்கனைகள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக 36 ரஷ்ய வீரர்களுக்கும், 24 பெலாரஸ் வீரர்களுக்கும் பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அழைப்பு விடுத்து இருந்தது.
இதில் ரஷ்யாவை சேர்ந்த 15 மற்றும் பெலாரசை சேர்ந்த 17 பேர் மட்டுமே அழைப்பை ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ரஷ்யா தரப்பில் 335 பேரும், பெலாரஸ் தரப்பில் 101 பேரும் கலந்து கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா மட்டும் பெலாரஸ் நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த வீரர்கள் பொதுக் கொடியின் கீழ் விளையாடுவார்கள்.
அதாவது அவர்கள் வெற்றி பெற்றால், அவர்களது நாட்டின் கொடி, தேசிய கீதம் என எதுவும் ஒலிக்கப்படாது. மாறாக பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு என தனியாக உள்ள பொதுக் கொடி மற்றும் தேசிய கீதம் ஒலிக்கப்படும். பாரீஸ் ஒலிம்பிக்கில் ரஷ்ய வீரர்கள் பலர் பங்கேற்பதை தவிர்த்ததாக கூறப்படுகிறது.
ரஷ்ய வீரர்கள் 55 பேருக்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சார்பில் பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் வெறும் 15 பேர் மட்டுமே அழைப்பை ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வீரர்கள் அனைவரும் அழைப்பை புறக்கணித்ததாக சொல்லப்படுகிறது.
AIN என்றால் என்ன?
பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்கள் AIN என்ற கொடியின் கீழ் பங்கேற்கின்றனர். அதாவது பிரஞ்சு மொழியில் Individual Neutral Athlete அல்லது Athlete Individuel Neutre என்ற அர்த்தமாகும். இதற்கு முன் டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடர்களில் ரஷ்யா வீரர்கள் ROC (Russian Olympic Committee), மற்றும் 2018 Pyeongchang குளிர்கால ஒலிம்பிக்கில் OARs (Olympic Athletes of Russia) என்ற தலைப்பின் கீழ் பங்கேற்றனர்.
கடைசியாக 2016 ரியோ ஒலிம்பிக்கில் தான் ரஷ்யா தனது சொந்த கொடி மற்றும் தேசிய கீதத்துடன் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் போருக்கு முன்னதாகவே இது போன்று குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களுடன் ரஷ்யா ஒலிம்பிக் போட்டிகளில் களமிறங்கி உள்ளது.
ரஷ்யா தரப்பில் இந்த முறை பல முன்னணி விளையாட்டு வீரர்கள் மட்டுமே ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்கின்றனர். டென்னிஸ் போட்டியில் ஆண்ட்ரி ரூப்லெவ், டெனில் மெத்வ்தேவ், கரேன் கச்சனோவ் மற்றும் டாரியா கசட்கினா, சாலை சைக்கிள் போட்டியில் அலெக்சாண்டர் விளாசோவ்.
அதைத் தொடர்ந்து டிராம்போலைன், ஜிம்னாஸ்டிக், மூன்று நீச்சல் வீரர்கள், இரண்டு படகுப் போட்டி வீரர்கள், இரண்டு துப்பாக்கி சுடும் வீரர்கள், இரண்டு படகோட்டிகள், இரண்டு மல்யுத்த வீரர்கள், இரண்டு பளு தூக்கும் வீரர்கள், ஒரு சாலை சைக்கிள் போட்டி வீரர் மற்றும் ஒரு டேக்வாண்டோ தடகள வீரர் ஆகியோர் இணைந்துள்ளனர்.
இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற டென்னிஸ் சாம்பியனான அரினா சபலெங்கா மற்றும் விக்டோரியா அசரென்கா ஆகிய பெலாரஸ் வீரர் வீராங்கனைகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக் 2024: 5வது நாளில் யார் யாருக்கு போட்டிகள்! முழு விபரம்! - Paris Olympics 2024