ஜெய்ப்பூர் : ஏப்ரல் 18ஆம் தேதி உலக பாரம்பரிய தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நஹர்கர்க் பகுதியில் ஜெய்ப்பூ மெழுகு சிலை அருங்காட்சியகம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு மெழுகு சிலை நிறுவப்பட்டு உள்ளது.
விராட் கோலி மெழுகு சிலையின் பர்ஸ்ட் லூக் அருங்காட்சியகத்தின் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து பேசிய அருங்காட்சியகத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் அனுப் ஸ்ரீவத்சவா, கடந்த ஆண்டு மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் சிலையை நிறுவக் கோரி அனைத்து தரப்பு மக்கள் குறிப்பாக குழந்தைகளிடம் இருந்து தொடர் கோரிக்கைகள் வந்ததாக தெரிவித்தார்.
குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் விளையாட்டின் அடையாளமாக விராட் கோலியை கருதுகின்றனர். உலக கிரிக்கெட்டில் மிக உயர்ந்த நிலைக்கு விராட் கோலி வந்துள்ள நிலையில், அவரது மெழுகு சிலையை நிறுவுவதை விட சிறந்த சந்தர்ப்பம் இருக்காது என்றும் சச்சின் தெண்டுல்கர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆகியோரை தொடர்ந்து விராட் கோலிக்கு மெழுகு சிலை உருவாக்கி உள்ளதாக அனுப் ஸ்ரீவத்சவா கூறினார்.
இரண்டு மாத கடும் முயற்சிக்கு பின்னர் கணேஷ் மற்றும் லட்சுமி அகிய கலைஞர்கள் விராட் கோலியின் மெழுகு சிலை உருவாக்கியதாக அனுப் ஸ்ரீவத்சவா தெரிவித்தார். இந்த அருங்காட்சியகத்தில் 44 மெழுகு சிலைகள் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 35 கிலோ எடையில் 5 அடி 9 இன்ச் என்ற உயரத்தில் விராட் கோலியின் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
35 வயதான விராட் கோலி நடப்பு ஐபிஎல் சீசனைல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 13 ஆயிரத்து 848 ரன்களும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆயிரத்து 848 ரன்களும் குவித்து உள்ள விராட் கோலி, டெஸ்ட்டில் நாட் அவுட் முறையில் 254 ரன்கள் குவித்து சாதனை படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.