பார்படாஸ்: ஐசிசி 9-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் லீக் மற்றும் சூப்பர் எட்டு சுற்று போட்டிகளில் தோல்வியையே சந்திக்காத இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் இறுதி போட்டியில் மோதின. பார்படாசில் நேற்று (ஜுன் 29) நடைபெற்ற பரபரப்பான இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி அவரும் விராட் கோலியும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர்.
யான்சென் வீசிய முதல் ஓவரிலேயே விராட் கோலி, 3 பவுண்டரி விரட்டி ஆட்டத்தை அட்டகாசமாக ஆரம்பித்தார். ஆனாலும் முக்கிய கட்டத்தில் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில், அணியில் ஸ்கோர் உயர விராட் கோலி போராடினார். 59 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்சருடன் 76 ரன்களை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். இந்திய அணி 176 ரன்களை எடுத்த நிலையில், விராட் கோலி 76 ரன்களை எடுத்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
அப்போது, ஆட்டநாயகன் விருது பெற்ற கையோடு, டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தாம் ஓய்வுபெறுவதாக கிங் கோலி அதிரடியாக அறிவித்தார். இதுகுறித்து விராட் கோலி கூறுகையில், "இதுதான் எனது கடைசி டி20 உலகக்கோப்பை போட்டி. இந்தியாவுக்காக விளையாடும் கடைசி டி20 போட்டியும் இதுதான். இந்த வெற்றியைத்தான் நாங்கள் அடைய விரும்பினோம். ஐசிசி போட்டியில் இந்த வெற்றியைப் பெறுவதற்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருந்தோம். எனக்கு இது 6வது டி20 உலகக்கோப்பைதான் ஆனால் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இது 9வது உலகக்கோப்பை. அணியில் உள்ள மற்றவர்களை போலவே அவரும் இந்த வெற்றிக்கு தகுதியானவர்” என்று கோலி கூறினார்.
மேன் ஆஃப் தி சீரிஸ்: இதேபோல், நடைபெற்று முடிந்துள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மொத்தமாக 15 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தொடர் நாயகன் விருது பெற்றார்.
இதையும் படிங்க: டி 20 உலகக்கோப்பையை தட்டி தூக்கிய இந்திய அணி; குடியரசு தலைவர் உள்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்து! - T20 World Cup 2024