ஐதராபாத்: பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தொடர் நீரிழப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோ எடையை தவிர்த்து வினேஷ் போகத் 100 கிராம் கூடுதல் எடையை கொண்டு இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சில மணித் துளிகளில் வினேஷ் போகத்திற்கு அதிகளவில் நீரிழப்பு ஏற்பட்டதாகவும், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள அவசர சிகிச்சை மையத்தில் வினேஷ் போகத் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தற்போது வினேஷ் போகத் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும், அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது. மேலும், வினேஷ் போகத் தற்போது ஓய்வு எடுத்து வருவதாக கூறப்பட்டுகிறது. துரதிர்ஷ்டவசமாக, ஒலிம்பிக் கமிட்டியின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இந்தியக் குழுவிற்கு எந்த வழியும் இல்லை என்றும், வினேஷ் போகத்தின் பயிற்சியாளர்கள் மற்றும் உதவி ஊழியர்கள், முடி வெட்டுதல் மற்றும் ரத்தத்தை எடுக்க முயற்சி செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் பலன் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
50 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டுள்ள வினேஷ் போகத் குறிப்பிட்ட எடையை காட்டிலும் 150 கிராம் அதிகமாக இருப்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனாலேயே அவர் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கூடுதல் எடையை குறைக்க இரவு முழுவதும் கண் விழித்து ஸ்கிப்பிங், ஜாகீங் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை வினேஷ் போகத் மேற்கொண்டு உள்ளார்.
பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்ட போது போதும் அவரது முயற்சிகள் பலனளிக்காமல் தோல்வியில் முடிந்தது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வினேஷ் போகத் மூலம் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு பேரிடியாய் இந்த செய்தி வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: வினேஷ் போகத் தகுதி நீக்கம்! பிரதமர் மோடி ஆறுதல்! - paris olympics 2024