செயின்ட் லூயிஸ்: அமெரிக்காவில் நடந்து செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா தொடர் தோல்விகளால் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டார். அமெரிக்காவின் மிஸ்செளரி மாகாணத்தில் நடைபெற்று வரும் செயின்ட் லூயிஸ் ரேபிட் மற்றும் பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் பிலிட்ஸ் பிரிவில் அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை குவித்த பிரக்ஞானந்தா, அதன் பின் தொடர்ந்து இறங்கு முகத்தில் காணப்படுகிறார். ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி மற்றும் ஹிகாரு நகமுரா ஆகியோருடன் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்த பிரக்ஞானந்தா, அடுத்து ஈரான் வீரர் அலிரேசா ஃபிரோஸ்ஜாவுக்கு எதிரான ஆட்டத்தில் டிரா செய்தார்.
அதன் பின் தொடர்ந்து ஆறு ஆட்டங்களில் பிரக்ஞானந்தா அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து தரவரிசைப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மொத்தம் விளையாடிய 9 ஆட்டங்களில் பிரக்ஞானந்தார் 2 வெற்றி, 1 டிரா, 6 தோல்விகளுடன் 6.5 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 10வது இடத்தில் நீடிக்கிறார்.
பிலிட்ஸ் பிரிவில் சுற்று ஆட்டங்கள் நிறைவடைய இன்னும் 9 ரவுண்டுகளே உள்ள நிலையில், அதில் வெற்றி பெற்று தரவரிசையில் பிரக்ஞானந்தா முன்னேறுவது என்பது கடினம் தான் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் ஈரான் வீரர் அலிரேசா ஃபிரோஸ்ஜா அடுத்தடுத்து ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரில் 17.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
அவரைத் தொடர்ந்து ரஷ்ய வீரர் இயன் நெபோம்னியாச்சி இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். பிரான்ஸ் நட்சத்திர வீரர் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவ் 15.5 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் நீடிக்கிறார். அமெரிக்க செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்ல ஈரான் வீரர் அலிரேசா ஃபிரோஸ்ஜாக்கு இன்னும் 1.5 புள்ளிகளே தேவைப்படும் நிலையில், சாம்பியன் பட்டத்தை அவர் வெல்லுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.