சிட்னி: ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி 3 டி20, 3 ஒரு நாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை ஆஸ்திரேலியா மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து, மூன்று ஒரு நாள் கொண்ட போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.
இதன் முதல் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து 2வது ஒரு நாள் போட்டி, ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, 45 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மரிசான் கேப் 77 ரன்களும், அன்னேக் போஷ் 44 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா அணியில் கார்ட்னர் மற்றும் மேகன் ஷட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து, 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 149 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 80 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய மரிசான் கேப் 3 விக்கெட்டுகளையும், எலிஸ்-மாரி மற்றும் டி கிளர்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனால் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது, தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி.
டிஆர்எஸ் முடிவில் குழம்பிய நடுவர்: இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்தது. அப்போது 23வது ஓவரை வீச வந்த ஆஷ்லே கார்டனர், ஓவரின் 5வது பந்தை வீசும்போது, அது பேட்ஸ்மேனின் பேடில் நேரடியாக பட்டுவிட்டது. இதனையடுத்து, ஆஸ்திரேலியா அணி நடுவரிடம் எல்பிடபிள்யூ முறையிட்டது. ஆனால், நடுவர் அவுட் கொடுக்கவில்லை. இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி 3வது நடுவரிடம் DRS முறையில் மேல் முறையீடு செய்தது.
இதனை பரிசோதித்த மூன்றாம் நடுவர், பந்து ஸ்டம்பில் படவில்லை என்பதை உறுதி செய்து, நாட் அவுட் என்பதை கள நடுவரான கிளாரி பொலோசாக்லிடம் தெரிவித்துள்ளார். ஆனால், கள நடுவரே தனது விரலை உயர்த்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதன் பின்னர் சுதாரித்துக் கொண்ட நடுவர் நாட் அவுட் என தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்... இந்திய அணி 106 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி!