சேலம்: டின்பில் எனப்படும் தமிழ்நாடு பிரிமியர் லீக்(TNPL 2024) கிரிக்கெட் போட்டிகள், கடந்த ஜூலை 5 ஆம் தேதி சேலத்தில் கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரின் 6வது லீக் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ், ஷிஜித் சந்திரன் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை எதிர் கொண்டது.
சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 51 ரன்களும், விமல் குமார் 47 ரன்களும் விளாசி இருந்தனர். சேலம் அணி தரப்பில் ஹரிஷ் குமார் மற்றும் சன்னி சந்து ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஆஷிக், பொய்யாமொழி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
SKM Salem Spartans register their first win of the season. 🔥
— TNPL (@TNPremierLeague) July 8, 2024
📺 Watch #TNPL2024 live on Star Sports 1, Star Sports 1 Tamil, and FanCode.#DDvSS #NammaOoruAattam #TNPL2024 #NammaOoruNammaGethu pic.twitter.com/LukiWOHR3p
இதனையடுத்து 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின், ஓபனிங் பேட்ஸ்மேன்களாக அபிஷேக் மற்றும் கவின் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து 59 ரன்கள் சேர்த்தனர்.
இதில் 28 ரன்கள் எடுத்து இருந்த அபிஷேக், வருண் சக்கரவர்த்தி வீசிய பந்தில் தினேஷ் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர், அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கவின் 46 ரன்களுக்கு விக்கெட் இழந்தார்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய ராஜேந்திரன் விவேக், திண்டுக்கல் பந்து வீச்சாளர்களை நாலபுறமும் சிதறடித்தார். 28 பந்துகளை எதிர் கொண்ட அவர் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்கள் விளாசியதுடன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இதனால், 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் வீழ்த்தியது, சேலம் ஸ்பார்டன்ஸ். கடந்த போட்டியில் மதுரையிடம் தோல்வியைத் தழுவிய சேலம் அணிக்கு இந்த வெற்றி உற்சாகத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.
ஆட்டநாயகன் -ராஜேந்திரன் விவேக்: சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த ராஜேந்திரன் விவேக் 'சேலம் ஸ்பார்டன்ஸ்' அணிக்காக விளையாடி வருகிறார். வெற்றி பிறகு ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட விவேக் இது குறித்து கூறுகையில், "சேலம் மக்கள் முன்பு விளையாடிய அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
கடந்த போட்டிகளில் என்னால் சரியாக விளையாட முடியவில்லை. இதனால், இந்த போட்டியில் கவனமாக விளையாடினேன். இந்த போட்டியில் வெற்றி பெற்றது, எங்களது அணிக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இனி வரும் போட்டிகளிலும் இதே உத்வேகத்துடன் களமிறங்குவோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் மழை.. இந்தியா - தென்னாப்பிரிக்கா மகளிர் 2வது டி20 தொடர் ரத்து!