சேலம்: டிஎன்பிஎல் 8வது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 2வது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் – திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நேற்று மாலை 3.15 மணியளவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் அந்தோணி தாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து திண்டுக்கல் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஷிவம் சிங் ஆகியோர் களமிறங்கினர். இதில் அஸ்வின் 5 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேற, அடுத்து வந்த விமல் குமார் 9 ரன்களுக்கு வெளியேறினர். இதனையடுத்து ஷிவம் சிங்குடன் - பாபா இந்திரஜித் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர்.
Hat-trick நாயகன் Easwaran! 🔥@Ashwathbobo @GrandCholasTNPL #TNPL2024#NammaOoruAattam#NammaOoruNammaGethu pic.twitter.com/gUg81zLobk
— TNPL (@TNPremierLeague) July 6, 2024
இதில் சிறப்பாக ஆடிய ஷிவம் சிங் 78 ரன்களிலும், இந்திரஜித் 33 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். இதன் பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் யாரும் பெரியதாக சோபிக்வில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது.
ஈஸ்வரன் ஹாட்ரிக் விக்கெட்: இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசிய ஈஸ்வரன் 32 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் முதல் முறையாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை ஈஸ்வரன் பெற்றார்.
திண்டுக்கல் டிராகன்ஸ் அபாரம்: 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது திருச்சி கிராண்ட் சோழாஸ். அந்த அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக வசிம் அகமது - அர்ஜூன் மூர்த்தி ஆகியோர் களமிறங்கினர். இதில் வசிம் அகமது 6 ரன்களிலும், அர்ஜூன் மூர்த்தி 18 ரன்களிலும் விக்கெட் இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனையடுத்து களமிறங்கிய ஷியாம் சுந்தர் 23 ரன்கள், சஞ்சய் யாதவ் 24 ரன்கள், ஆர்.ராஜ்குமார் 31 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஆட்டமிழந்தனர். சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் திருச்சி அணியால் இலக்கை எட்ட முடியவில்லை.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே சேர்த்தது திருச்சி. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுக்களையும், சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி அசத்தினர். இதே போல் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு போட்டியில் சேலம் ஸ்பார்டென்ஸை அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: IND Vs ZIM; 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது இந்தியா!