ஐதராபாத்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. பாராலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய வீரர்கள் சுமித் அன்டில் மற்றும் பாக்யஸ்ரீ ஜாதவ் தேசியக் கொடியை சுமந்து கொண்டு இந்திய அணியை வழிநடத்திச் சென்றனர். முன்னதாக 2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் இந்தியா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது.
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலத்துடன் மொத்தம் 19 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்தமாக பதக்க பட்டியலில் 24வது இடத்தை பிடித்தது. இந்நிலையில், பாரீஸ் பாராலிம்பிக்ஸ் தொடரில் அதையும் தாண்டி கூடுதலாக பதக்கங்களை கைப்பற்ற இந்தியா திட்டமிட்டுள்ளது.
சாதிக்க துடிக்கும் தமிழக வீரர் வீராங்கனைகள்: உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு பங்கேற்கிறார். மாரியப்பன் தங்கவேலு ரியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அதன்பிறகு 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். இச்சூழலில் தான் இந்த முறை ஹாட்ரிக் பதக்கம் வெல்லும் முனைப்பில் களம் காண்கிறார்.
அதேபோல், பாரா பேட்மிண்டன் பிரிவில் தமிழக வீரர் சிவராஜன் பங்கேற்கிறார். இவர் ஆசிய அளவில் நடைபெற்ற பாரா விளையாட்டுப் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். அதேபோன்று ஆசிய பாரா 2023 தொடரில் சிவராஜன் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றிருக்கிறார்.
மகளிர் பாரா பேட்மிண்டன் பிரிவில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் விளையாட உள்ளார். மற்றொரு வீராங்கனைகளாக பாரா பேட்மிண்டன் பிரிவில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மனிஷா ராமதாஸ் மற்றும் நித்திய ஸ்ரீ சிவன் பங்கேற்கிறார்கள். பவர்லிப்டிங் மகளிர் 67 கிலோ பிரிவில் தமிழக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி களம் காண்கிறார்.
பாரீஸ் பாராலிம்பிக்ஸ்: சரியாக ஓலிம்பிக் போட்டி முடிந்த 17 நாட்களுக்கு பின் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடர் நடைபெறுகிறது. ஒலிம்பிக் தொடர் போல் பாராலிம்பிக்ஸ் தொடரின் தொடக்க விழாவும் வண்ணமயமாக காட்சி அளித்த்து. கணவர் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு வீரர் வீராங்கனைகளின் அணிவகுப்பு என தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது.
சுவீடன் நடனக் கலைஞர் அலெக்சான்டர் எக்மன் தலைமையிலான நடனக் குழு, பிரபல பாப் பாடகர்கள் என தொடக்க விழாவில் காணும் இடமெல்லாம் கலை விருந்து கண்களை கவர்ந்தது. தொடக்க விழாவில் மொத்தம் 50 ஆயிரம் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
எத்தனை வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு: பாரீஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் மொத்தம் 4 ஆயிரம் வீரர் வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். இன்று முதல் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
இதையும் படிங்க: கெயில், பாண்ட்யா, பொல்லார்டுக்கு இடமில்லை! அஸ்வினின் ஆல்டைம் ஐபிஎல் லெவனில் யாரார் தெரியுமா? - Ashwin All Time IPL Playing XI