பார்படோஸ்: ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த சுற்றில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். இதில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டி பார்படோசில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்க உள்ளது.
ஏ பிரிவில் இருந்த இந்திய அணி லீக் சுற்றில் 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதேபோன்று சி பிரிவில் இருந்த ஆப்கானிஸ்தான் அணி 4 போட்டிகளில் 3 இல் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது.
இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை அமெரிக்காவில் நடந்த லீக் சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தொடக்கத்திலும் ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஆட்டத்தின் நடு மற்றும் இறுதி ஓவர்களில் அதிரடி காட்டுவதால் அதிக ரன்களை சேர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சை பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா ஆகியோர் வேகபந்து வீச்சில் பலம் சேர்க்கின்றனர். அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் பந்துவீச்சுக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.
ஆப்கன் அணியின் அபார ஆட்டம்: ஆப்கானிஸ்தான் அணி யாரும் எதிர்பாராத அளவிற்கு இந்த உலகக்கோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இருப்பினும் லீக் சுற்றின் கடைசி போட்டியில் வெஸ்ட் இண்டிஸிடம் தோல்வியடைந்த கையோடு இப்போட்டியை விளையாட வருகிறது. பேட்டிங்கை பொறுத்தவரை ரஹ்மனுல்லா குர்பாஸ் தொடக்கத்தில் அதிரடி காட்டுகிறார். அவருடன் இப்ராஹிம் ஸத்ரான், முகமது நபி, அஸ்மதுல்லா ஒமர்ஸாய், நஜிபுல்ல ஸத்ரான் ஆகியோர் தங்களால் முடிந்த பங்களிப்பை அளித்து வருகிறார்கள்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் ஃபரூக்கி, நவீன் உல் ஹக் மற்றும் அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் வேகப்பந்துவீச்சில் கலக்கி வருகின்றனர். இவர்களுடன் சேர்ந்து ரஷித் கான், நூர் அஹ்மத் மற்றும் முகமது நபி ஆகியோர் சுழல் பந்து வீச்சின் மூலம் எதிரணி பேட்டர்களுக்கு தொல்லை கொடுக்கின்றனர். இரு அணிகளும் இந்த உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் இப்போட்டி நிச்சயம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை ஊதித்தள்ளிய இங்கிலாந்து அபார வெற்றி! - ICC T20 World Cup 2024