ப்ளோரிடா: நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 30வது லீக் போட்டியில் குருப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. ப்ளோரிடாவில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த போட்டியானது தொடங்குகிறது.
பாகிஸ்தான் அணிக்கு சிக்கல்: தற்போது 'குரூப் ஏ' பிரிவில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்திய அணி தான் ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
அமெரிக்கா அணியை பொறுத்தவரையில் 3 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 3வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெற வேண்டுமானால், அமெரிக்கா - அயர்லாந்து இடையேயான போட்டியில் அயர்லாந்து அணி வெல்ல வேண்டும். அதேசமயத்தில், பாகிஸ்தான் அயர்லாந்துடன் விளையாடும்போது அவர்களை வீழ்த்தியாக வேண்டும். இப்படி நடந்தால் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியும். ஆனால் சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதற்கு அமெரிக்காவிற்குத்தான் அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
போட்டி ரத்தாக வாய்ப்பு? அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் ப்ளோரிடா மைதானத்தில் கனமழை பெய்ய அதிகம் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு வேளை மழையால் இந்த போட்டி கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கு தலா 1 புள்ளி வழங்கப்படும்.
அப்படியொரு நிலை ஏற்பட்டால், புள்ளிகள் அடிப்படையில் அமெரிக்கா அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும். பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறும் சூழல் உருவாகும். இதனால், பாகிஸ்தான் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அதே போல் நாளை நடைபெறவுள்ள இந்தியா- கனடா அணிகளுக்கு இடையிலான போட்டியும் மழையால் ரத்தாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஓமனை 50 ரன்களில் சுருட்டி இங்கிலாந்து அசத்தல்! மற்றொரு ஆட்டத்தில் வங்கதேசம் அபார வெற்றி!