சென்னை: நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 46-வது லீல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முன்னதாக ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு.
நடப்பு சீசனில் பவுலர்களுக்கான இடமே இல்லாமல் போய்விட்டதே ஏன்? "அப்படிச் சொல்ல முடியாது. ஐபிஎல் தொடர் என்பது வெறும் 2 மாதங்கள் நடக்கிறது. அதையும் தாண்டி நிறைய கிரிக்கெட் போட்டிகள் இருக்கிறது. இங்கே நிறையா ப்ளாட் பிட்சுகள் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் தற்போது இம்பேக்ட் பிளேயர் விதிமுறை உள்ளதால் கூடுதல் பேட்ஸ்மேன்களை பயன்படுத்துகிறார்கள்.இது பந்து வீச்சாளர்களை விட பேட்ஸ்மேன்களுக்கு மிக உதவியாக உள்ளது. இதை கவனத்தில் கொண்டு மாற்றங்கள் செய்யப்படலாம். இந்த நிலைமை அடுத்த சீசனில் கூட மாற்றம் செய்யப்படலாம்" என்றார்.
உலகக் கோப்பை இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்படுவரா? "நடராஜன் ஒரு சிறந்த பிளேயர். ஆனால் அவர் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் போதுதான் அவரை பற்றிப் பேசுகிறார்கள், மற்ற நேரங்களில் அவரை மறந்துவிடுகிறார்கள்.
ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த சீசனில் அவருக்கு சில காயங்கள் இருந்தது. இந்த சீசனில் அவர் முழு உடல் தகுதியுடன் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார்.
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இடம் பெறுவாரா? என்பது குறித்து நான் கருத்து கூற முடியாது.
என் என்றால் நான் வேறொரு நாட்டை சேர்த்தவன். நான் இந்த விஷயத்தில் பதில் சொல்வது சர்ச்சையாக முடிந்துவிடும். நடராஜன் இடம் பெறுவது இந்திய அணியின் தேர்வர்கள் கையில் உள்ளது. ஆனால், நடராஜன் அதற்குத் தகுதியானவர்" என்றார்.
இந்த சீசனில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படவில்லையோ? "இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை ஸ்பின் செய்யவே நினைப்பதில்லை. அவர்கள் வேகமாகவே வீச நினைக்கிறார்கள். அப்படி வீசப்படும் பந்துகளை பேட்ஸ்மேன்கள் சுலபாமாக எதிர் கொண்டு விடுகிறார்கள்.
பந்தை ஸ்பின் செய்யும் போது தான் அது டீவியேட் ஆகி பேட்ஸ்மேனை ஏமாற்றும். எனவே பேட்ஸ்மேன்களை ஏமாற்றும் வகையில் பந்தை ஸ்பின் செய்ய வேண்டும்" என்றார். 17வது ஐபிஎல் சீசன் முடிந்தவுடன், ஜூன் மாதம் முதல் டி20 உலகக் கோப்பை தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில் நடராஜன் இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவானான முத்தையா முரளிதரன் பேசியதற்குப் பலரும் ஆதரவான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கம்பேக் கொடுத்த சிஸ்கே..! ஹைதராபாத்தை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி!