ஐதராபாத் : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 15 ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், எதிர்பார்த்திராத அணிகள் சிறப்பாக விளையாடி வருகின்றன. அதேநேரம் ஐந்து முறை சாம்பியன் பட்டம் பெற்ற மும்பை அணி படுமோசமாக விளையாடி வருகிறது.
நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் மும்பை அணி தோல்வி கண்டு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சி மீதமுள்ள அதிருப்தி காரணமாகவே இந்த நிலை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், காயம் காரணமாக கடந்த மூன்று ஆட்டங்களிலும் விளையாடாத சூர்யகுமார் யாதவ் விரைவில் அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குடலிறக்க பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட சூர்யகுமார் யாதவ், தற்போது பூரண குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடனான அடுத்த ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவார் எனக் தகவல் கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் கடைசியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அந்த போட்டியில் சதம் விளாசி இருந்தார். அதன் பின் குடலிறக்க பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் உடற்தகுதி சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
உடல் தகுத் தேர்வில் அவர் தேர்வானதை அடுத்து மீண்டும் கிரிக்கெட் விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெள்ளிக்கிழமை (ஏப்.5) மும்பை அணியுடன் அவர் இணைவார் என்றும் சக வீரர்களுடன் சேர்ந்து அவர் வலை பயிற்சியில் ஈடுபட உள்ளதாகவும் மும்பை அணி தரப்பில் தகவல் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : ஆல்ரவுண்ட் பர்பாமன்ஸ் கொடுத்த கேகேஆர்.. டெல்லியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி! - DC Vs KKR