மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரின் 55வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொண்டது. வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன் படி முதலில் களமிறங்கியது, ஹைதராபாத் அணி. டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இதில் அபிஷேக் சர்மா 11 ரன்களுக்கு வெளியேற, அடுத்து மாயங் அகர்வால் 5 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார்.
மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டிராவிஸ் ஹெட் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் 20 ரன்களுக்கு வெளியேறினர். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் பெரியதாக சோபிக்கவில்லை. இறுதியில் களமிறங்கிய பேட் கம்மின்ஸ் 35 ரன்கள் விளாசினார்.
இதனால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர். இதனையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற களமிறங்கிய மும்பை அணி, ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறியது.
அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரோகித் சர்மா 4 ரன்களிலும், இஷான் கிஷன் 9 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து களமிறங்கிய நமன், ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். இதனால், 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது, மும்பை அணி.
இதனை அடுத்து திலக் வர்மா மற்றும் சூர்யாகுமார் யாதவ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர். இதில், ஹைதராபாத் பந்து வீச்சாளர்களை நாலாபுறமும் சிதறவிட்ட சூர்யமுமார் யாதவ் சதம் விளாசினார்.
அவருக்கு பக்கப்பலமாக இறுதிவரை களத்திலிருந்த திலக் வர்மா, 37 ரன்கள் விளாசினார். இதனால், 17.2 ஒவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்த மும்பை இந்தியன்ஸ், 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.
இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 4வது வெற்றியை பதிவு செய்தது, மும்பை இந்தியன்ஸ். இந்த போட்டியில், 51 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் என 102 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: இந்திய அணியின் ஜெர்சியிலும் காவியா? டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி ஜெர்சி அறிமுகம்!