ஹைதராபாத்: 17வது ஐபிஎல் தொடரின் 8வது லீக் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகிறது. இரு அணிகள் முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், இன்று வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கியது. டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது. அறிமுக போட்டியில் களமிறங்கிய இளம் தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர் மஃபாகா முதல் ஓவரில் 7 ரன்கள் அளித்தார்.
சற்று அதிரடி காட்டத் தொடங்கிய மயாங்க் அகர்வால் 11 ரன்களுக்கு பாண்டியா பந்தில் அவுட்டானார். மறுபக்கம் டிராவிஸ் ஹெட் பவுண்டரி, சிக்சர்களாக விளாசி வந்தார். மஃபாகா ஓவரில் அடுத்தடுத்து சிக்சர்கள் அடித்தார். மூன்றாவதாக களமிறங்கிய அபிஷேக் சர்மா மும்பை பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தார்.
ஹைதராபாத் அணி 7 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது. மும்பை சுழற்பந்து வீச்சாளர் சாவ்லா வீசிய முதல் ஓவரில் 21 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 2வது விக்கெட்டுக்கு ஹெட், அபிஷேக் சர்மா ஜோடி 50 ரன்கள் சேர்த்த நிலையில், ஹெட் கோயட்சி பந்தில் 62 ரன்களுக்கு அவுட்டானார்.
மறுமுனையில் விளாசலைத் தொடர்ந்த அபிஷேக் சர்மா 16 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தார். பின்னர், சாவ்லா பந்தில் சிக்சர் அடித்த நிலையில், அவர் பந்திலேயே லாங் ஆனில் (long on) கேட்ச் கொடுத்து 63 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் ஜோடி சேர்ந்த மார்க்ரம், கிளாசென் ஜோடி அதிரடியைத் தொடர்ந்தது. கிளாசென் முலானி, பாண்டியா ஆகியோர் பந்துகளில் சிக்சர்களாக விளாசினார். அதேபோல், பும்ரா பந்தில் கிளாசென் சிக்ஸ் அடிக்க, ஹைதராபாத் அணி 15 ஓவர்களில் 200 ரன்களைக் கடந்தது.
கிளாசென், மார்க்ரம் இருவரும் விளாசிய நிலையில், மும்பை பவுலர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். மஃபாகா 4 ஓவர்களில் 66 ரன்கள் வாரி வழங்கினார். கிளாசென் இந்த ஐபிஎல்-இல் இரண்டாவது அரைசதத்தை பதிவு செய்தார். ஓரளவு கட்டுக்கோப்பாக வீசிய பும்ரா 4 ஓவர்களில் 36 ரன்கள் வழங்கினார்.
கடைசி ஓவரில் ஹைதராபாத் அணி 21 ரன்கள் எடுக்க மொத்தம் 20 ஓவர்களில் 277 ரன்கள் எடுத்தது. மேலும், ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் குவித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சாதனையை ஹைதராபாத் அணி முறியடித்து சாதனை படைத்துள்ளது. மார்க்ரம் 42 ரன்களும், கிளாசென் 80 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.
இதையும் படிங்க: CSK VS GT: ரச்சின்- துபே அதிரடி..குஜராத்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே! - IPL 2024 CSK VS GT