சென்னை:17 வது ஐபில் சீசன் வரும் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. இதில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, குஜராத், ஹைதராபாத் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர் கொள்கிறது.
மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு இந்த போட்டியானது துவங்குகிறது. இதற்காக ஃபாஃப் டு பிளெசிஸ், விராட் கோலி, முகமது சிராஜ், கிளைன் மேக்ஸ்வெல் உள்ளிட்ட அனைத்து பெங்களூரு அணி வீரர்களும் இன்று காலை(மார்ச் 20) சென்னை வந்தடைந்தனர். அப்போது சென்னை விமான நிலையத்தில் குவிந்த ஆர்சிபி ரசிகர்கள் பெங்களூரு வீரர்களை ஆராவாரத்துடன் வரவேற்றனர். இதனையடுத்து சென்னை சேப்பாக்கம் மைதானம் வந்தடைந்த வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
முன்னதாக ஆர்.சி.பி. அணியின் பெயர் இந்த சீசனில் மாற்றப்பட்டுள்ளது. அதாவது 'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்' என்பதற்கு பதிலாக 'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு'(Royal Challengers Bengaluru) என மாற்றப்பட்டுள்ளது. அதே போல் லோகோ மற்றும் புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விராட் கோலி, மகளிர் பிரீமியர் லீக் தொடரின் ஆர்சிபி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, பாப் டூப்ளெசிஸ் ஆகியோர் கலந்து கொண்டு புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தினர்.
பிரம்மாண்ட ஏற்பாடு: இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் தொடக்கவிழா பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 22ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை 1 மணி நேரம் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.இதில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மேலும் பிரபல இந்தி நடிகர் க்ஷய்குமார், டைகர் ஷெராப் ஆகியோர் ரசிகர்களை ஆரவாரப்படுத்த இருக்கிறார்கள். அதே போல் பாடகர் சோனு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.இவை அனைத்தையும் ஜியோ சினிமாவில் இலவசமாக கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.