ஹைதராபாத்: மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 14 போட்டிகளில் 4 வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் முடித்திருக்கிறது. இதற்கு காரணம் கேப்டன்சி மாற்றம் என கடுமையாக ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது.
அதேபோல், ரோகித் - ஹர்திக் இடையே சரியான புரிதல் இல்லை, மும்பை அணியே இரண்டாக பிரிந்திருக்கிறது என்றெல்லாம் கடுமையான முறையில் விமர்சிக்கப்பட்டது. இந்தச் சூழலில் கடந்த மே 11ஆம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது, ரோகித் சர்மா கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் உரையாடும் வீடியோ ஒன்று கொல்கத்தா அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டது.
பின்னர் ரசிகர்களின் கண்டனத்தை தொடர்ந்து, அந்த வீடியோ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நிலையில் தான், இது தொடர்பான பதிவு ஒன்றை ரோகித் சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை மிகவும் ஊடுருவக்கூடியதாக மாறிவிட்டது. இப்போதொல்லாம் கேமராக்கள் பயிற்சியின் போது மற்றும் போட்டி நாட்களில் நமது நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாடுவது பதிவு செய்கின்றன. ஒவ்வொரு அசைவுகளும் பதிவு செய்யப்படுகிறது.
எனது உரையாடலை பதிவு செய்யாதீர்கள் என ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கேட்டுக் கொண்டும், அது ஒளிபரப்பப்பட்டது. இது தனிமனித உரிமை மீறலாகும். எங்கேஜிங்கான கண்டண்ட் வேண்டும் என்று இது போன்ற செயல்களை செய்வது ஒருநாள் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் இடையேயான நம்பிக்கை உடைந்துவிடும். நல்ல எண்ணங்கள் மேலோங்கட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிரப்சிம்ரன் சிங் அசத்தல் பேட்டிங்.. தொடரை வெற்றியுடன் முடிக்குமா பஞ்சாப் அணி? - SRH VS PBKS